சீனாவிடம் இருந்து அதிவிரைவு அடையாளங்காட்டிகளை இந்தியாவின் ஏர்இந்தியா விமானத்தை எடுத்துக் கொண்டு போய் வாங்கி வந்தோம். ஆனால் அவைகள் இரண்டே நாட்களில் பல்லிளித்து விட்டன. தற்போது சீன நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவிக்கிறது. நம்பலாமா என்ற கேள்வி எழுகிறது? 25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் கொரோனாவிற்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் தரப்பில் கொரோனாவை எதிர்க்கும் எதிர்உயிரியைக் கண்டறிந்துள்ளதாகவும், இத்தாலி தரப்பில், தடுப்பு மருந்தை உருவாக்கி விட்டதாகவும் கூறியுள்ளார்கள். இந்நிலையில் சீனாவும் தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிகோவாக் எனப்படும் இந்த மருந்தை பீஜிங்கைச் சேர்ந்த சினாவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. குரங்குகளுக்கு இம்மருந்தை செலுத்தி, 3 கிழமைகள் கழித்து கொரோனா தாக்குதலுக்கு உட்படுத்தினர். அடுத்த ஒரு கிழமை கழித்து சோதனை செய்து பார்த்தபோது, குரங்குகளின் நுரையீரலில் நுண்ணுயிரித் தொற்று இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மருந்து செலுத்தப்படாத கொரோனா தொற்றுக்கு உள்ளான குரங்குகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் பிகோவாக் தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



