31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்கர்களை விட இந்தியர்கள் அதிக அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச சுகாதாரக் காப்பீட்டு நிறுவனமான சிக்னா: வேலை பளு மற்றும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர் பற்றிய ஆய்வை நடத்தியது. பிரேசில், இந்தோனிஷியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, இந்தியா ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் மன அழுத்தம் மிக அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரில் 89விழுக்காடு பேர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேச சராசரியை விட அதிகமாகும். சர்வதேச சராசரியே 86 விழுக்காடாகத்தான் உள்ளது. மன அழுத்தத்திற்கு முதன்மைக் காரணமாக இருப்பது வேலையும், அவர்களின் நிதி சார்ந்த பிரச்சினைகளும்தான் என்று கூறப்பட்டுள்ளது. 23 நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் 20 நகரங்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளன. இதில் பங்கெடுத்தவர்களில் 1000 பேர் வரை 25 அகவையைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 18 அகவை முதல் 34 அகவைக்கு உட்பட்டவர்களே மற்ற அகவையினரைக் காட்டிலும் வேலை மற்றும் நிதி பிரச்சினைகளால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என்றும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இவர்களில் 95 விழுக்காட்டினர் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகக் கூறியுள்ளனர். இந்தியாவில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் தங்களது நண்பர்களுடன் நேரம் ஒதுக்கவும், பொழுதுபோக்குக்கு நேரம் ஒதுக்கவும் இயலவில்லை என்று கூறியுள்ளனர். அதேபோல குடும்பத்துடன் நேரம் ஒதுக்குவதும் குறைந்து வருவதாக இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனம் ஆய்வு நடத்திய நான்கு ஆண்டுகளிலும் இந்தியா மோசமான இடத்தையே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு பிடித்தப்படி இருக்காமல் போவதும், பண பிரச்னை, வேலை சுமை, சமூக பிரச்னை இதுவே மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வானது தொடர்ந்து நான்காவது ஆண்டாக சிக்னா நிறுவனத்தால் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் மன அழுத்தப் பாதிப்பு உள்ளவர்களைக் காண முடிகிறது. மன அழுத்தம் பற்றி உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின் படி, இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 50விழுக்காடடிற்கும் அதிகமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், மன அழுத்தம் ஒரு தேசியப் பிரச்சினை ஆகிவருகிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மக்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கு இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைமுறை, சிதைந்துபோன உறவுமுறை, மறைந்துபோன கூட்டுக் குடும்ப மகிழ்ச்சி ஆகியவற்றை காரணமாக கூறலாம் என்றும், நடுவண் - மாநில அரசுகள் இதைக் கவனத்தில் கொண்டு, மன அழுத்த நோயாளிகள் எதிர்கொள்ளும் மனம் மற்றும் உடல்ரீதியிலான பிரச்சினைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க சிறப்பு மையங்களை தொடங்க வேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது. ஒரு சிறப்;பு என்னவென்றால், தமிழகத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப் படுகிறவர்களின் சராசரி இந்திய சராசரியைவிட குறைவாம். இந்தியாவின் ஒட்டு மொத்தப் பொருளாதாரமும், கல்வி நிறுவனங்களும், தொழிலும், வணிகமும் குறிப்பிட்ட ஆயிரத்திற்கு குறைவான நபர்களிடமே உள்ளன. மீதியுள்ள அனைவரும் நிருவாகக் கூலியாகவோ, உடலுழைப்புக் கூலியாகவோ, கார்ப்பரேட் நிறுவனங்களில் மிக மிகக் குறைவாகவும், குறைந்த சம்பளத்திற்கு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், பெருவாரியாகவும், அடிமை வாழ்வு நடத்துவதுதாம் இந்தியாவின் மனஉளைச்சலுக்கான அடிப்படை. வட மாநிலங்களில்: அதிக எண்ணிக்கையில், கல்வியும் இல்லாமல், தொழிலும் இல்லாமல், சொந்த நிலமும் வீடும் இல்லாமல், எடுபிடிகளாக மாநிலம்;, மாநிலமாக படையெடுக்கிறவர்களாகவும், கடை, வீடு புகுந்து திருடுகிறவர்கள் என்றும், குழந்;தைத் திருடர்கள் என்றும் எங்கு வேண்டுமானலும் அனாதைகளாக செத்துப்; போகிறவர்களாகவும் இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுந்தாம் எலிவலையானாலும் தனிவலை என்று தொழில் செய்கிறவர்கள் அதிகம் அதன் பொருட்டே தமிழகத்தினருக்கு மனஉளைச்சல் குறைவு. அப்படிப் பட்ட தமிழகத்தின் தொழிலும் வணிகமும் கல்வியும் கார்ப்பரேட்டுகளுக்கு பிடுங்கிக் கொடுக்கும் முயற்சியில் ஈடு பட்டு தமிழகத்தையும மனஉளைச்சல் மாநிலமாக மாற்ற பாஜக நடுவண் அரசு முயன்று வருகிறது. தமிழர்கள் துணிச்சலாகப் போராடி மீட்டும் வருகின்றனர். கல்வி, வணிகம், தொழில், பொருளாதாரம் ஆகியவற்றில் சமத்துவம் மன உற்சாகத்திற்கான உணவு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,849.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



