Show all

இழந்தது இந்தியா தெற்கே இலங்கை, ஈழம்; இழக்கிறது வடக்கே நேபாளம்! அயலகக் கொள்கைகளில்: சீனா கள்ளாட்டமா இந்தியா தள்ளாட்டமா

23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  இந்தியா அருகே இமயமலை சாரலில் உள்ள அழகிய நாடு நேபாளம். இதுவரை இந்த நாடு எரி பொருள் உள்ளிட்ட அனைத்து தலையாய பொருட்களுக்கும் இந்தியாவின் தயவை நாடி இருந்தது.

வர்த்தகத்துக்கு மற்ற நாடுகளுடன் தொடர்பு கொள்ள இந்திய துறை முகங்களை பயன்படுத்தி வந்தது. இது போன்று அனைத்து தேவைகளுக்கும் இந்தியாவை சார்ந்தே இருந்தது.

இந்த நிலையில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னம், நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய கடும் தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் அங்கு எரிபொருள், மருந்து உள்ளிட்ட தலையாய பொருட்களுக்கு பல மாதங்கள் கடும் தட்டுப்பாடு நிலவியது.

அதை தொடர்ந்து மற்றொரு அண்டை நாடான சீனாவின் உதவியை நேபாளம் நாடியது. அதன் பின்னர் 2 நாடுகளும் நட்புறவு கொள்ளத் தொடங்கின. இந்த நிலையில் நேபாளமும், சீனாவும் வர்த்தகரீதியில் உறவை விரிவுபடுத்த முடிவு செய்தன.

அதுகுறித்து 2 நாடுகளுக்கும் இடையே சரக்கு மற்றும் போக்குவரத்து ஒப்பந்தம் காத்மாண்டுவில் நேற்று முடிவானது. அதன்படி சீனா தனது நாட்டில் உள்ள தியான்ஜின் ஷெங்ஷென், வியான் புங்காங், மற்றும் ஷான் ஜியாங் ஆகிய 4 துறைமுகங்களை நேபாளம் பயன்படுத்தி கொள்ள சம்மதித்தது.

அதே நேரத்தில் நேபாளம் தன்னிடம் உள்ள லாங்ஷூ, லாசா மற்றும் ஸஸிகாட்ஸ் பகுதியில் சாலைகளை பயன்படுத்திக் கொள்ள சீனாவுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் நடைமுறைக்கு வருகிறது.

இது நேபாள வரலாற்றில் முக்கிய மைல்கல் என அந்நாட்டு வர்த்தக மந்திரி ரா ஷங்கர் சஞ்சு தெரிவித்துள்ளார். இந்தியா 2 துறை முகங்களை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கியது. ஆனால் சீனா 4 துறைமுகங்களை வழங்கி உள்ளது.

இதன் மூலம் ஜப்பான், தென்கொரியா, மற்றும் வடக்கு ஆசிய நாடுகளுக்கு சரக்குகளை அனுப்ப முடியும், செலவும், பயண நேரமும் மிச்சமாகும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து சரக்குகளை அனுப்ப 3 மாதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அண்டை நாடுகளுடன் சீனா தனது உறவை வலுப்படுத்தி வருகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் தற்போதைய நடவடிக்கையால் நேபாளத்தில் இந்தியாவின் தனிப்பட்ட ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. 

இந்திய அயலகக் கொள்கை இந்தியக் கூட்டாட்சித் தத்துவ அடிப்படையில் உருவாகமல், குறிப்பிட்ட குழுவின் ஆதிக்கக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே கட்டமைக்கப் பட்டு வருகிறது. அதனால், இந்திய இனமக்கள் உள்ள பங்களாதேசம், தமிழீழம், நேபாளம் ஆகிய நாடுகள் மீதான இந்திய அயலகக் கொள்கையின் பார்வையில் குறைபாடு இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,904.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.