Show all

இந்தியாவில், விடுதலை புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்குத் தடை! தமிழீழம் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதாலாம்

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு, பாஜக நடுவண் அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதால் அந்த அமைப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அறங்கூற்ற மன்றத் தீர்ப்பையொட்டி தடை நீக்கம் செய்து, "தடை வன்முறைக்கேயன்றி, தமிழீழ முன்னெடுப்புக்கு இல்லை" என்பதாக, தமிழீழ மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பெருமை சேர்த்தது. 

எனினும் இந்தியாவில் புலிகள் இயக்கம் மீதான தடையை காங்கிரஸ் அரசுக்குப் பிந்தைய பாஜக நடுவண் அரசும் நீக்க முயலவில்லை. 

விடுதலைப் புலிகள் மீதான தடையை 2 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய நடுவண் அரசில் பொறுப்பில் இருந்த காங்கிரசும், தற்போது பொறுப்பில் இருக்கிற பாஜகவும் தொடர்ந்து நீட்டித்து வருகின்றன. 


இந்த நிலையில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து நடுவண் உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்: தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் விடுதலை புலிகள் ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. விடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன. இதனால் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, விடுதலை புலிகள் இயக்கத்தின் தடை நீட்டிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,152.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.