Show all

பிரேசில் அதிபர் மகிழ்ச்சி! கொரோனாவில் குணமானதை முகநூலில் பதிவிட்டார்

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனேரோ கொரோனாவில் குணமானதை முகநூலில் பதிவிட்டு மகிழ்ச்சி

12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: பிரேசிலில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் பிரேசில், படுவேகமாக அதிக பாதிப்புகளை கொண்டு 2-ஆவது இடத்தில் உள்ளது.

இத்தனை பாதிப்புகள் இருக்கும் போதிலும் பிரேசிலில் ஊரடங்கை அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சோனேரோ நடைமுறைப்படுத்தவில்லை. 

அவரது பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட அனைவரும் முகமூடிகளை அணிந்து கொண்டாலும் அவர் மட்டும் முகமூடி  அணியாமல் வலம் வந்தார். தனது ஆதரவாளர்களுக்கு கைகுலுக்குவது, கட்டி அணைப்பது போன்ற கொரோனாவுக்கு பிடித்தமான பாடுகளை செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு இருபது நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா இருப்பதாக முடிவு வந்தது. இதையடுத்து அவர் தன்னை தானே அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதையடுத்து இவருக்கு கிழமைக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு நேற்று மூன்றாவது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதியானதாக அதிபர் மாளிகை செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. எனினும் அவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை உட்கொண்டு வந்த அவர் நான்காவது முறையாக நேற்று கொரோனா சோதனை எடுத்துக் கொண்டார். அதில் அவருக்கு கொரோனா இல்லை என வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அதிபர், தனது முகநூல் பக்கத்தில் அனைவருக்கும் வணக்கம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளேன் என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.