Show all

தொடரட்டும் மகிழ்ச்சி! கொரோனாவிற்கு விடை கொடுத்து வருகிறது சென்னை

சென்னை மாநகரம் கொரோனாவில் இருந்து விரைவில் முழுமையாக மீளும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது. 

12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் தற்போதைய நிலையில் 13,744 பேர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை மாநகரம் கொரோனாவில் இருந்து விரைவில் முழுமையாக மீளும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அன்றாடம் ஆறாயிரத்தை கடந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையைக் காட்டிலும், குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருந்தால் விரைவில் கொரோனாவில் இருந்து மீள முடியும். அப்படியான நிலை தற்போது சென்னையில் காணப்படுகிறது. 

தமிழகத்தின் மற்ற ஊர்களில் கொரோனா உச்சம் பெற்று வரும் நிலையில், சென்னையில் மட்டும் தலைகீழாக உள்ளது. பாதிப்பு குறைந்து வருகிறது. 

சென்னையில். கடந்த 24 மணி நேரத்தில் 1,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அதே 24 மணி நேரத்தில் 1,315 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 94,695 ஆக அதிகரித்துள்ள போதிலும், குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்துள்ளது. இதுவரை 78,940 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

சென்னையில் கொரோனா தொற்றால். இதுவரை 2,011 பேர் உயிரிழந்துள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் இன்று காலை நிலவரப்படி 13,744 பேர்கள் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். பிற மாவட்டங்களை சேர்ந்த 488 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலையும் சென்னை மாநகராட்சி தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

திருவொற்றியூர் மண்டலத்தில் 441 பேர்களும், மணலியில் 196 பேர்களும், மாதவரத்தில் 488 பேர்களும், நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். தண்டையார்பேட்டை மண்டலத்தில் 605 பேர்களும், ராயபுரத்தில் 906 பேர்களும், திருவிக நகரில் 1,171 பேர்களும், சிகிச்சை பெற்று வருகிறார்கள். அம்பத்தூரில் 1100 பேர்களும், அம்பத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த 1,100 பேர்களும், அண்ணா நகர் மண்டலத்தில் 1,601 பேர்களும், தேனாம்பேட்டையில் 1,116 பேர்களும், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,192 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வளசரவாக்கத்தில் 886 பேர்களும், ஆலந்தூர் மண்டலத்தில் 538 பேர்களும், அடையாறு மண்டலத்தில் 1,180 பேர்களும், பெருங்குடியில் 468 பேர்களும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 368 பேர்களும், பிற மாவட்டங்களை சேர்ந்த 488 பேர்களும், கொரோனா பாதிப்புடன் சென்னையின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

கொரோனா சென்னை பாதிப்பு அளவு சீராகவே உள்ளது. குணம் அடைவோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது சென்னையின் மக்கள் தொகை, மிகமிக அதிகம். அதேபோல் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது மருத்துவ கட்டமைப்பு வசதியும் இங்கு சிறப்பாக உள்ளது. எனவே சென்னை விரைவில் கொரோனாவை வெல்லும் என எதிர்பார்க்கலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.