வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியமைந்தால் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று பாகிஸ்தான் தலைமைஅமைச்சர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியமைந்தால் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
அதற்கான காரணமாக அவர் கூறுவது: அடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் பாகிஸ்தானுடன் ஆன எந்த ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுப்பையும் அப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக எடுக்க அனுமதிக்காது, ஆட்சியைப் பிடித்தாலும் வலதுசாரிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகப் பயந்து காஷ்மீர் விவகாரம் குறித்து எந்த முன்னெடுப்பையும் அது எடுக்காது.
அத்தோடு அவர் நிறுத்தவில்லை. இந்தியாவில் இப்போது நடந்து வருவதை நான் எண்ணிக்கூட பார்க்கவில்லை. முஸ்லிமாக இருப்பதே அங்கு தாக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இந்தியாவில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இன்றைய தினம் மிகு ஹிந்து தேசியவாதத்தினால் கவலையடைந்துள்ளனர். இஸ்ரேல் பிரதமர் நெதனாயு போலவே மோடியும் அங்கு 'அச்சம் மற்றும் ஹிந்து தேசிய உணர்வு' ஆகியவற்றைக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
காஷ்மீரில் பிற மாநிலத்தவர்கள் சொத்து வாங்குவதைத் தடைசெய்யும் காஷ்மீர் சிறப்பு உரிமைகள் சட்டம் ரத்து செய்யப்படும் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி கூட கருத்துப் பரப்புதலாகவே இருக்க வாய்ப்புள்ளது.
பாகிஸ்தான் ஏழைமக்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றால் அண்டைநாடுகளான ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான் ஆகியவற்றுடன் அமைதியான உறவுகளை பேணுவது அவசியம் என்று தெரிவித்திருக்கிறார் இம்ரான்கான்.
பாஜக ஆட்சியிலிருக்கும் போது ஒரு ஆணியும் பிடுங்காது! ஆனால் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தால், காங்கிரசை பாஜக, எல்லா ஆணிகளையும் பிடுங்கியே ஆக வேண்டும் என்று நிர்பந்திக்கும் என்பதுதான் இம்ரான்கான் தெரிவிக்கும் கருத்து.
ராபேல் பேர ஊழல் மட்டும், காங்கிரஸ் ஆட்சியில் முன்னெடுக்கப் பட்டு, இந்த நிலைக்கு வந்திருந்தால், எப்போதோ காங்கிரஸ் ஆட்சி கலைக்கப் பட்டிருக்கும் என்பதுதான் எதார்த்தமான உண்மை.
பாஜக கையில் இருக்கிற ஒரே வலிமையான ஆயுதம்: 'பாஜகவை எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகள்' என்கிற கருத்தியல்தான் அந்த ஆயுதம். அந்த ஆயுதத்திற்கு பெரிய பெரிய இதழ்கள், உச்சஅறங்கூற்றுமன்றம், நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை, தேர்தல் ஆணையம், இப்படி இந்தியாவின் உயர்மட்ட அமைப்புகள், மாநிலக் கட்சிகள், ஏன் காங்கிரஸ் கட்சியும் கூட, நமக்கேன் வம்பு என்று ஒதுங்குவதே மோடியின் பெரிய பலமாக இருந்து வருகிறது.
ஆனால், அந்த பலத்தையே- அபிநந்தனை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்து அசைத்தவர்தான் இம்ரான்கான்.
ஆனால் இம்ரான்கானின் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டு-
'மோடிக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் பாகிஸ்தானுக்கு விழும் ஓட்டு! காங்கிரஸ் கருத்து.
மோடியின் தேர்தல் வெற்றிக்காக பாகிஸ்தான் உதவி! அரவிந்த் கெஜ்ரிவால்.'
இப்படியெல்லாம் தலைப்பிட்டு, இம்ரான்கானை பாஜகவின் ஆதரவாளர் போல காட்டுவதும், அச்சப்படுவதும், கொண்டாடுவதுமான வேடிக்கைகள் நடந்தேறி வருகின்றன.
இம்ரான்கான்: தமிழில் உள்ள, அணியிலக்கணத்தில் ஒன்றான, வஞ்சப்புகழ்ச்சி அணியில் பாஜகவை திறனாய்வு செய்திருக்கிறார். அவ்வளவுதான். இகழ்வது போல் புகழ்தலும், புகழ்வது போல் இகழ்தலும் வஞ்சப் புகழ்ச்சி அணி என்று தமிழ் சுட்டுகிறது.
பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே.
என்பது புறநானூறு. பாடியவர்- கபிலர்
'புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைம்மாறு கருதாமல் கொடுக்கின்றான்? மாரியும்தான் கைம்மாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகம் புரக்கின்றது' என்பது இப்பாடலின் பொருள். இது பாரியை இகழ்வது போலத் தோன்றினும், பாரிக்கு நிகராகக் கொடுப்பாரில்லை என்று புகழ்ந்ததே ஆகும்.(இகழ்வது போல் புகழ்தல்)
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
என்பது திருக்குறள்.
'கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்' என்பது இக்குறட்பாவின் பொருள்.
கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)
பாஜக குறித்த இம்ரான்கானில் திறனாய்வு புகழ்வது போல் இகழும் வஞ்சப் புகழ்ச்சி அணி! அவ்வளவுதான்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,118.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.