Show all

உலகப் பெரும் காணொளி கலந்தாய்வு இப்ப தேவையா! முதலில் அபிநந்தனை மீட்கப் பாருங்கள்; மோடி மீது கெஜ்ரிவால் கோபம்

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று பாஜக தொண்டர்கள் நடுவே காணொளி கலந்தாய்வு மூலம் மோடி உரையாற்றி இருக்கிறார். இது உலகிலேயே மிகப் பெரிய காணொளி கலந்தாய்வு என்றும் சொல்லப்படுகிறது. 

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை பாஜக அப்பட்டமான அரசியலாக்கி குளறுபடிகள் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்:

ஊரே பற்றியெரிந்த நிலையில் நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக, இப்போது தொண்டர்கள் நடுவே மோடி காணொளி கலந்தாய்வு மூலம் பேசுவது தேவைதானா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. 

இந்தக் காணொளி கலந்தாய்வு குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், மோடிக்கு தனது கீச்சுப் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். 

அதில், காணொளி கலந்தாய்வு மூலம் பாஜக தொண்டர்கள் நடுவே உரையாற்றும், மோடி அந்த நிழ்ச்சியை தள்ளி வைக்கவேண்டும். இந்நேரத்தில் நாட்டில் இருப்பவர்கள் எல்லோருமே பாகிஸ்தான் வசம் சிக்கி இருக்கும், நம் வீரரை பத்திரமாக மீட்டு வருவதில்தான் சக்தி முழுவதையும் செலவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் இது பற்றி சொல்லும்போது, ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் தேசப்பாதுகாப்பு குறித்து கவலையில் உள்ளது. முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அவரின் உண்ணாவிரதப் போராட்டத்தையே ஒத்திவைத்துள்ளார். அதேபோல, காங்கிரஸ் கட்சியும் தங்களின் செயற்குழு கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டது. ஆனால், மோடி மட்டும் வாக்கு சாவடியை பலப்படுத்துவதிலும், பாஜக தேர்தல் கருத்துப் பரப்புதலிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார் என தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,077.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.