Show all

இம்ரான் கான் அதிரடி! மிடுக்குப்பேசிகள் இறக்குமதிக்கு ஓராண்டு தடை

26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் இனி ஒர் ஆண்டுக்கு மிடுக்குப்பேசிகளை இறக்குமதி செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் அந்நாட்டின் புதிய தலைமை அமைச்சர் இம்ரான் கான்.

பாகிஸ்தான தலைமை அமைச்சராகப் பதவியேற்ற பின் இம்ரான் கான் அதிரடியான நடவடிக்கைகளை செய்து வருகிறார். அதன்படி முதல் நாளே, ஆடம்பர கார்களில் அமைச்சர்கள் செல்ல கூடாது என்று ஆணையிட்டார். அதன்பின் தேவையில்லாத சொகுசு உலங்கூர்தி பயணத்தை தவிர்ப்பேன் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இது போல அரசு சம்பந்தமான பல ஆடம்பர பராமரியங்களை தடை செய்தார்.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானில் மிடுக்குப் பேசிகள் இறக்குமதி செய்வதை தடை செய்துள்ளார். அதன்படி இனி பாகிஸ்தானில் உற்பத்தி ஆகும் செல்பேசிகளை மட்டுமே வாங்க முடியும். ஓர்ஆண்டு இந்த தடை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் சொகுசு கார், பாலாடைக்கட்டி, வெண்ணை ஆகியவற்றை இறக்குமதி செய்யவும் தடை செய்துள்ளார்.

பாகிஸ்தானில் தற்போது பொருளாதார தட்டுப்பாடு நிலவுகிறது. அவர்களிடம் டாலர் கையிருப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் இன்னும் அதிக டாலர்களை இழக்க நேரிடும். இது இன்னும் அந்த நாட்டு பொருளாதாரத்தை பாதிக்கும். இதனால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதலில் இதற்காக சர்வதேச வங்கிகளில் கடன் வாங்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானை கடனாளியாக்க விரும்ப மாட்டேன் என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,907.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.