ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் கரிமஆய்வு முடிவுகள், அந்தப் பொருட்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று காட்டுகின்றன. 24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருட்களை, அமெரிக்காவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அங்கு கரிம ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அதில் ஒரு பொருளின் அகவை 2924 ஆண்டுகள் என்றும், மற்றொன்றின் அகவை 2810 ஆண்டுகள் என தெரிய வந்துள்ளது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிமீ தொலைவில் தென்கிழக்காக, தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், உலக அளவில் பலமுறை அகழாய்வுகள் செய்யப்பட நகரங்களில் ஒன்று. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் 151 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தொடங்கியது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இங்கு இனப் பகுப்பாய்வுக்கு ஆய்வு செய்துள்ளனர். இங்கு கிடைத்த மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகளை எடுத்து சென்றுள்ளனர். 119 ஆண்டுகளுக்கு முன்னம் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய தொல்லியல் ஆராய்ச்சிக்காக இந்தியா வந்த அலெக்ஸ்சாண்டர் ரீ என்பவர் தமிழகம் முழுவதும் பல தொல்லியல் ஆய்வுகளை நடத்தி உள்ளார். ஆதிச்சநல்லூரை முழுமையாக அகழ்வாராய்ச்சி செய்தது அலெக்ஸ்சாண்டர் ரீ தான். ஆய்விற்கு பின்பு, எகிப்திய பிரமிடுகள் என்று சொல்லக்கூடிய புதை குழிகளை விடவும் பழமையானவை இங்குள்ளன என்று கூறியுள்ளார். முதன் முறையாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய நாகரீகம் இருந்தது என்பதற்கான சான்றுகளாக இந்த ஆய்வுகள் இருந்தன. மீண்டும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தொல்லியல் துறை, முனைவர் தியாக சத்தியமூர்த்தி மற்றும் குழுவினரை அமைத்து அகழ்வாய்வு நடத்தியது. செய்துங்க நல்லூரை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர் மதுரை உயர்அறங்கூற்றுமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை பதிகை செய்து இருந்தார். ஆதிச்சநல்லூரிலுள்ள பழமையான பாண்டிய மன்னர் கோயில் அதில், ஆதிச்ச நல்லூரில் இதுவரை நான்கு கட்ட அகழ்வாய்வு நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுகள் குறித்து எந்த ஆய்வறிக்கையும் வெளியிடப்படவில்லை. எனவே, ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையினை வெளியிட வேண்டும், அகழ்வாய்வினை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு முன்னர் விசாரணைக்கு வந்த பொழுது, ஆதிச்ச நல்லூரில் கண்டறியப்பட்ட பொருட்களை கரிம ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டு இருந்தனர். அதன் அடிப்படையில் ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை அமெரிக்காவின் புளோரிடா நகரிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி கரிம ஆய்வு செய்த முடிவுகளை கடந்த வியாழக்கிழமை நடுவண் அரசு, உயர் அறங்கூற்று மன்றத்தில் சமர்ப்பித்தது. எனவே, அறங்கூற்றுவர்கள் கரிம ஆய்வின் அடிப்படையில் ஆதிச்ச நல்லூரில் அடுத்த கட்ட அகழாய்வு பணியினை மேற்கொள்ளப்போவது நடுவண் அரசா, மாநில அரசா என்று தெரிவிக்க வேண்டும் எனக் கூறி வழக்கினை எதிர்வரும் வியாழக் கிழமைக்குத் தள்ளி வைத்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் தொடங்கப்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழாய்வு இப்போது தான் தமிழன் நாகரீகம் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்ததும் கூட என்பதற்கான ஒற்றைத் தகவலை மட்டும் மீட்டிருக்கிறது. இன்னும் 99.9999 விழுக்காட்டுத் தகவல்கள் மீட்கப்பட்டால் இந்தியாவில் தமிழர் சார்பினங்கள் தவிர்த்து, ஆரியர்களும், ஆரியச் சார்பினங்களும், ஏன் பாஜகவும், ஹிந்தியும், ஹிந்துத்துவாவும் தலைதெறிக்க ஓட வேண்டியிருக்கும். ஆனால்- பாஜகவும், பாஜக அடிவருடிகளும் இந்தத் தேர்தலில் வென்றால், அந்த முயற்சிகள் எல்லாம் நிரந்தரமாகக் கிடப்பில் போடப் பட்டு, தமிழர்- தம்சொந்த உடைமைகளுக்கு: நீட், மீத்தேன், டோல்கேட், சரக்கு-சேவைவரி என்று தமிழர் வாடகைகளைக் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,115.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.