அந்தச் சேதியைப் பார்த்த பெண் அதிர்ந்து போயுள்ளார். பெண்ணுக்கு உணவு கொண்டுதருகையை நிறைவு செய்ய வேண்டிய ஊழியரிடம் இருந்து அந்தச்சேதி வந்துள்ளது. அப்படி என்ன சேதியை ஊழியர் அனுப்பியுள்ளார். 30,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இயங்கலையில் பல்வகைப் பொருட்களுக்குக் கேட்பு அளிக்கும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படியான இயங்கலை கேட்புகளின் வளர்ச்சிக்குக் கொரோனா பெருங்காரணம் என்றால் மிகையாகாது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை உட்பட அனைத்தும் இயங்கலையில் கிடைக்கிறது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று பொருட்கள் வாங்குவதை பெரும்பாலும் தவிர்கின்றனர். குறிப்பாக இயங்கலை கொண்டுதருகைகளில் (டெலிவரி) முதன்மையான ஒன்று உணவு வகைகள். ஸ்விக்கி, சொமாட்டோ, உபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளோடு உணவுகள் கொண்டுதருகையை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில் லண்டன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உபர் ஈட்சில் பர்கர் உள்ளிட்ட உணவுகளுக்கு கேட்பு அளித்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு தாங்கள் கேட்பு அளித்த உணவு பொருள் கொண்டுதருகைக்கு வந்துக் கொண்டிருக்கிறது என காண்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கேட்பு செய்த பொருள் வீட்டுக்கே வந்துவிட்டது என காண்பிக்கப்பட்டுள்ளது. உணவு பொருள் வாங்க பெண் தயாராக இருந்த நிலையில் அடுத்து ஒரு சேதி (மெசேஜ்) வந்துள்ளது. அந்தச் சேதியைப் பார்த்த பெண் அதிர்ந்து போயுள்ளார். பெண்ணுக்கு உணவு கொண்டுதருகையை நிறைவு செய்ய வேண்டிய ஊழியரிடம் இருந்து அந்தச்சேதி வந்துள்ளது. அதில் ‘மன்னித்துவிடுங்கள் நான் உணவை சாப்பிட்டுவிட்டேன்’ என கூறியுள்ளார் ஊழியர். இதைப் பார்த்த அந்த பெண் ஒரு நிமிடம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்ததாக அந்த பெண்ணுக்கு நீங்கள் கேட்;பு அளித்த உணவின் கொண்டுதருகை செயல்பாடு நிறைவடைந்தது என்று சேதி வந்துள்ளது. இந்த இடத்தில் நம்மால் யோசிக்கவே முடியாத அந்தச் செயல்பாட்டை அந்தத் தாயுள்ளம் முன்னெடுத்தது, இணையத்தை தீயாக்கும் செய்தியாக மாறக் காரணம் ஆனது. அந்தப் பெண் புதிய உணவுக்குக் கேட்பு அளித்துள்ளார். அந்தப் பெண், ஊபர் ஊழியரை குறை கூறவில்லை. காரணம் வழக்கமான நிகழ்வு போல் இல்லாமல் இந்த நிகழ்வு சற்று மாறுபாடாக இருந்ததால் அந்த ஊழியரை மன்னித்துவிடுகிறேன் என அந்த பெண் கூறியுள்ளார். மேலும் கொண்டுதருகையை நிறைவு செய்ய வேண்டிய ஊழியர் அதிக பசியுடன் இருந்திருக்கலாம் எனவும், அதன்காரணமாக இந்த உணவை உண்டிருக்கலாம் எனவும் அந்த பெண் கூறியுள்ளார். மேலும் இந்தக் காலக்கட்டத்தில் தன்னால் ஒரு ஊழியர் வேலை இழப்பதை தான் விரும்பவில்லை எனவும் உணவை உண்ட ஊழியர் அதை மறைக்காமல் நேர்மையாக தன்னிடம் கூறியது சிறந்த பாடு எனவும் இந்தப் பாட்டை வேடிக்கையாகவே பார்க்கிறேன் எனவும் அந்த பெண் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.