Show all

எலன்மாஸ்க் அதிரடியால் பின்வாங்கும் உலக நாடுகள்! பிட்காசு தடை நோக்கங்கள்- மாறின முறைப்படுத்தும் முயற்சிகளாக

உலகில் பல நாடுகள் தற்போது பிட்காசு மற்றும் இதர எண்ணிமச் செலாவணியைத் தடை செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கி இந்த வணிகத்தை எப்படி முறைப்படுத்துவது என்பதில் கவனத்தைச் செலுத்தி வருகின்றன.

30,தை,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க அரசு எண்ணிமச் செலாவணி (கிரிப்டோகரன்சி) மீதான வணிகத்தைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று திட்டமிடத் தொடங்கிய நிலையில் பிட்காசு மதிப்பு பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது. 

இதைத் தொடர்ந்து உலகப் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் எதிர்கால லாப நோக்கத்திற்காக சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து பிட்காசு வாங்கியதை அடுத்து பிட்காசின் மதிப்பு அதிரடியாக அதிகரித்தது. 

இதைத் தொடர்ந்து பிட்காசு மற்றும் இதர எண்ணிமச் செலாவணிகளைப் (கிரிப்டோகரன்சி) பயன்படுத்தவும் வணிகம் செய்யவும் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கித் தர மாஸ்டர்கார்டு, பாங்க் ஆப் நியூயார்க் மெலான் கார்ப் ஆகிய முன்னணி நிதி நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. 

நிதி நிறுவனங்களின் இந்த அறிவிப்பு வெளியானது முதல் பிட்காசின் மதிப்பு சுமார் 8.1 விழுக்காடு வரையில் வளர்ச்சி அடைந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன் மூலம் ஒரு பிட்காசின் மதிப்பு 48,925 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. 

பேபால் ஏற்கனவே எண்ணிமச் செலாவணி (கிரிப்டோகரன்சி) கொடுப்பனவை ஏற்று வரும் நிலையில், டெஸ்லா திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், கூடிய விரைவில் எண்ணிமச் செலாவணியைக் கொண்டு டெஸ்லா கார் வாங்கும் முறையைத் தனது நிறுவனத்தின் கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது. 

இது பிட்காசு மற்றும் இதர எண்ணிமச் செலாவணி முதலீட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்லா, மாஸ்டர்கார்டு, பாங்க் ஆப் நியூயார்க் மெலான் கார்ப் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்து எண்ணிமச் செலாவணி மற்றும் அதன் வணிகத்திற்கு ஆதரவு அளித்து வரும் நிலையில் உலக நாடுகளின் அரசுகள் இதை முழுமையாகத் தடை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதன் எதிரொலியாகத் தற்போது பிட்காசின் மதிப்பு 48,925 டாலர் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன் மூலம் அடுத்த சில நாட்களில் பிட்காயின் மதிப்பு 50000 டாலரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலகில் பல நாடுகள் தற்போது பிட்காசு மற்றும் இதர எண்ணிமச் செலாவணியைத் தடை செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கி இந்த வணிகத்தை எப்படி முறைப்படுத்துவது என்பதில் கவனத்தைச் செலுத்தி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.