Show all

‘மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது’ பாடல் யாருக்குச் சொந்தம்! கலைவாணிக்கு என்கிறார் ராஜலட்சுமி. தனக்கு என்கிறார் கலைச்செல்வி

‘மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது’ பாடல்- தனது தங்கை கலைவாணி என்பவர் இயற்றிப் பாடியதாக ராஜலட்சுமி ஒரு மேடையில் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக- மதுரமல்லி என்னும் புனைப்பெயரில் பாடி வரும் முனைவர் கலைச்செல்வி தன்னுடையது என்று தெரிவித்து செந்தில் கணேஷ்- ராஜலட்சுமிக்குக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

29,தை,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறந்த பாடகர் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற இணையர் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி. நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி தமிழகம் முழுவதும் பேரறிமுகமான இவர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மேடை கச்சேரிகளில் பாடி வருகின்றனர். நாட்டுபுற கவிஞர் செல்லதங்கையா என்பவரின் பாடல்வரிகளுக்கு உயிர்கொடுத்து வரும் செந்தில் கணேஷ்- ராஜலெட்சுமி இணையர் மீது தற்போது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரமல்லி என்ற புனைப் பெயரில் பாடல்களை இயற்றி பாடிவரும் முனைவர் கலைச்செல்வியின் எழுத்தில் உருவான ‘மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது’ என்ற பாடல் அவரின் குரலில் வலையொளியல் வெளியாகி தற்போது 2 கோடிக்கு அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் அண்மையில் நடந்த கோவில் விழா மேடைக்கச்சேரி ஒன்றில், இந்தப் பாடலைப் பாடிய செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி இணையர் இந்தப் பாடல் தனது தங்கை கலைவாணி என்பவர் இயற்றி பாடியதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மதுரமல்லி, தான் இயற்றிய பாடிய இந்தப் பாடலை, யாரோ ஒரு பெண் எழுதியதாக ராஜலட்சுமி சொந்தம் கொண்டாடுகிறார் என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப்பாடலை இயற்றி பாடியதற்கு ஆதரமாக வலையொளியில் அந்தப் பாடல் இன்றளவும்  பல்லாயிரம் கொண்டாடிகளைக் கவர்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ள அவர், ராஜலட்சுமி தனது தவறான கருத்தை திரும்பப்  பெறவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என பரபரப்பான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது புகழின் உச்சிக்கு சென்றுள்ள நாட்டுப்புற பாடல் இணையர் செந்தில் ராஜலெட்சுமி ஆகியோர் மீது தான் எழுப்பியுள்ள இந்த குற்றச்சாட்டுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக கிராமிய பாடகி மதுர மல்லி தெரிவித்துள்ளார். ஆனால் மதுரமல்லியின் குற்றச்சாட்டை ராஜலட்சுமி மறுத்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.