Show all

முகேஷ் அம்பானி வெளியேறினார்! ஒன்றிரண்டு பணக்காரர்களை மட்டுமே தூக்கிப்பிடித்ததால், ஒட்டு மொத்த இந்தியாவிற்கே வந்தஇழப்பு

ஒன்றிய பாஜக அரசு, ஒன்றிரண்டு பணக்காரர்களை மட்டுமே தூக்கிப்பிடித்ததால், ஒட்டு மொத்த இந்தியாவிற்கே இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த ஒன்றிரண்டில் முதலாமவரான, முகேஷ் அம்பானி உலகின் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது அவருக்கு மட்டுமான இழப்பு அன்று ஒட்டுமொத்த இந்தியாவிற்கான இழப்பே. 
 
16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகப் பணக்காரர்கள் பட்டியலில் நடப்பு ஆண்டில் மிகப்பெரிய மாற்றங்கள் எதிர்கொண்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு தொடர் சொத்து மதிப்பின் வீழ்ச்சியின் காரணமாக முகேஷ் அம்பானி உலகின் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

உலகின் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்ட வீழ்ச்சியையும் தாண்டி, 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டு இருந்த முகேஷ் அம்பானி- இந்த ஆண்டின் இன்றைய கடைசி நாளில் சீனாவின் ஜாங் சான்சான் என்பவரால் 12ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார். இது அவருக்கு மட்டுமான இழப்பு அன்று ஒட்டுமொத்த இந்தியாவிற்கான இழப்பே. 

இது மட்டும் அல்லாமல் முகேஷ் அம்பானியின் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தையும் ஜாங் சான்சான் தட்டி சென்று உள்ளார்.   

ஆறாம் வகுப்பு மட்டுமே படித்த ஜாங் சான்சான், தனது பனிரெண்டு அகவை முதல் கட்டிட வேலை, விற்பனையாளர் எனப் பல சின்ன சின்ன வேலைகளைச் செய்து, தனி ஆளாக வளர்ந்தவர். 24 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தொடங்கிய நோங்பூ ஸ்பிரிங் என்ற குடுவைக் குடிநீர் மற்றும் குளிர் குடிப்பு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் நிலையான வளர்ச்சி அடைந்து இன்று சீனாவின் மிகப்பெரிய குளிர் குடிப்பு நிறுவனமாக உயர்ந்துள்ளது. 

இத்துடன் ஜாங் சான்சான், மருந்து துறையிலும் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைக் கொண்ட வான்டாய் என்னும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நடப்பு கொரோனா காலத்தில் மக்கள் நலங்கு மற்றும் மருத்துவத்துறைக்கு அதிகளவிலான முதன்மைத்துவம் கொடுத்த காரணத்தால் ஜாங் சான்சான், நிறுவனத்தின் குடுவைக் குடிநீர் வணிகமும், மருந்து வணிகமும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. 

ஜாங் சான்சான், எந்த அரசியல் தொடர்பும் இல்லாமல், சீனாவின் மிகப்பெரிய வணிகமாக கருதப்படும் மனைவிற்பனை, தொழிற் நுட்பம் போன்ற துறைகளில் இல்லாமல் தனித்தொரு துறையில் வணிகத்தைத் தொடங்கிச் சாதித்துள்ளார். நடப்பு ஆண்டில் சீனாவின் மனைவிற்பனை மற்றும் தொழிற் நுட்பம் சார்ந்த பல பெரும்பணக்காரர்களைப் பின்னுக்குத்தள்ளி சீனா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக உயர்ந்துள்ளார். 

ஜாங் சான்சான் தனது மருந்து தயாரிப்பு நிறுவனமான வான்டாய் பயோலாஜிக்கல் பார்மஸி நிறுவனத்தைச் சீன பங்குச்சந்தையிலும், நோங்பூ ஸ்பிரிங் நிறுவனத்தை ஹாங்காங் பங்குச்சந்தையிலும் பட்டியலிட்டார். பங்கு மதிப்பு உயர்வு நோங்பூ ஸ்பிரிங் பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பின்பு 155விழுக்காடும், வான்டாய் பயோலாஜிக்கல் பார்மஸி நிறுவனம் சுமார் 2000 விழுக்காடும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் ஜாங் சான்சான் நடப்பு ஆண்டில் 70.9 பில்லியன் டாலர் உயர்ந்து மொத்த சொத்து மதிப்பு 78.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 

இந்த அதிரடி வளர்ச்சியின் காரணமாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஜாங் சான்சான் 11வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜாங் வளர்ச்சியாலும், முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு சரிவினாலும்; 11 இடத்தையும், ஆசியவின் பெரும் பணக்காரர் என்ற தகுதியையும் இழந்தார் முகேஷ் அம்பானி. இது அவருக்கு மட்டுமான இழப்பு அன்று; ஒட்டுமொத்த இந்தியாவிற்கான இழப்பே. 

இது, மேலும்- பணமதிப்பிழப்பு, சரக்குசேவை வரி, போன்ற நடவடிக்கைகளால், பல்லாயிரக் கணக்கான பணக்காரர்களை வீழ்த்திவிட்டு, ஒன்றிரண்டு பணக்காரர்களை மட்டுமே தூக்கிப்பிடித்த ஒன்றிய பாஜகஅரசின் நோக்கத்திற்கும், கொள்கைகளுக்கும் கிடைத்திட்ட பெருந்தோல்வியேயாகும். 

இன்றைக்கும்- ஒன்றிரண்டு பணக்காரர் வாழ்வுக்காக பல ஆயிரம் உழவர்களை பனியிலும் குளிரிலும் ஒரு மாத காலத்திற்கும் மேலாகப் போராடவிட்டும்- கருப்பு வேளாண் சட்டங்களைத் திரும்பிப் பெறக்கூடாது என்கிற நோக்கத்தில், கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.