அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய வருகை இரண்டு நாட்களாக உலகின் பேசுபொருளாக அமைந்தது. இந்திய நடுநிலையாளர்களின் மனதில் இந்த வருகையால் ஆதாயம் அடையப்போவது டிரம்ப்பால் அமெரிக்காவா? மோடியால் இந்தியாவா என்ற கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது. அள்ளிச்சென்றது அமெரிக்க அதிபர்தான். ஆதாயம் அடையப் போவது அமெரிக்காதான் என்பது தெரிந்து விட்டது. இந்தியா-அமெரிக்கா இடையே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. 14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: எகிப்து அறிஞன் தாலமி புலம்புவான்: இந்தத் தமிழர்கள் முத்தையும், மயில்தோகையையும் கொடுத்துவிட்டு தங்கத்தைச் அள்ளிச் செல்கிறார்கள் என்று. இது தமிழக முத்தை பாலில் ஊறவைத்துக் குளிக்கும் உலகஅழகி கிளியோபட்ரா காலத்தில் நம்பழந்தமிழர் எகிப்தோடு வணிகத் தொடர்பில் இருந்த காலத்தில். இன்றைக்கு தங்கம்தாம் உலகம் முழுவதுமான மாற்று செலாவணி என்ற நிலையில்- நேற்று டெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தியா-அமெரிக்கா இடையே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆம் இந்தியா தங்கம் தந்தால் அமெரிக்கா ஆயுதங்கள் தரும். இந்தியாவில் இரண்டு நாள் அரசு முறைப்பயணத்தை மேற்கொண்ட அதிபர் டிரம்ப் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் தலைமைஅமைச்சர் மோடியை சந்தித்துக் கலந்துரையாடினார். வர்த்தகம், எரிசக்தித் துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு உள்ளிட்டவை தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். கலந்துரையாடலுக்குப் பிறகு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இருநாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர். மனநல மருத்துவத் துறையில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இந்திய-அமெரிக்க நலங்குத் துறைகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மருத்துவ உபகரணங்கள் பாதுகாப்பில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்துக்கும் இந்தியாவின் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கும் இடையே மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், எரிசக்தித் துறையில் ஒருங்கிணைந்து பணியாற்றுவது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம், எக்ஸான் மொபில் இந்தியா நிறுவனம், அமெரிக்காவின் சார்ட் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவிலிருந்து 21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



