பணம் எடுப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை இந்திய நடுவண் அரசு தளர்த்த வேண்டும் என்று அயல்நாட்டு தூதரகங்களின் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரும், கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினிக் குடியரசின் தூதருமான ஃபிரான்க் ஹன்ஸ் டன்னென்பர்க் காஸ்டெலனஸ், தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அதிக மதிப்புடைய ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு, பணம் எடுப்பதற்கு நடுவண் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடிகிறது. இதனால், அயல்நாட்டு தூதரகங்களின் தினசரி அலுவல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பணம் எடுப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை நடுவண் அரசு தளர்த்த வேண்டும். ஒருவேளை இந்த நிலை தொடர்ந்தால், மிகப் பெரிய நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களுக்கும் இதேபோன்று பணம் எடுப்பதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று எச்சரிக்கிறேன். ஈரான், கியூபா, சூடான் உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளவர்கள், பணம் எடுப்பதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் நாட்டு குடிமக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதே எங்களின் (தூதர்கள்) கடமை. இதுதொடர்பாக சில அயல்நாட்டுத் தூதரகங்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கடிதம் எழுதி அனுப்பினேன். அதற்கு, இந்த விவகாரம் தொடர்பாக பொருளாதார விவகாரங்கள் துறையை அணுகியிருப்பதாக அந்த அமைப்பு பதிலளித்தது என்று ஃபிரான்க் ஹன்ஸ் டன்னென்பர்க் காஸ்டெலன்ஸ் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



