இந்த உலகம் தற்போது சந்தித்து வரும் தலையாய பிரச்சினைகளுள் ஒன்று, உலக வெப்பமயமாதலை ஏற்படுத்தக்கூடிய, அசுர வேகத்தில் அதிகரித்துவரும் கரியமில வாயுவின் அளவுதான். அதனால்தான் ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் அதிக அளவு கரியமில வாயுவை வெளியிடும் தன்மைகொண்ட புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த முடிவுசெய்துள்ளன. அதோடு, கரியமில வாயுவை குறைவாக அல்லது முற்றிலுமாக வெளியிடாத தன்மைகொண்ட மற்றும் மறுசுழற்சி செய்யப்படக்கூடிய சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற இயற்கைக்கு குந்தகம் விளைவிக்காத பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாமல் உலகின் இதர நாடுகளும் விரைவில் சூரிய ஒளி மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்து உலக கரியமில வாயுவின் அளவைக் குறைக்காவிடில் பூமி விரைவில் வெப்பத்தில் கருகிப் பொசுங்கிவிடும் என்பதே நிதர்சனமான மற்றும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை. உலகில் வேகமாக அதிகரித்துவரும் கரியமில வாயுவின் அளவைக் குறைக்க வேறு என்னென்ன வழிகள் இருக்கின்றன? முதலில், மக்கள்தொகைப் பெருக்கம், தொழிற்சாலைகள் மற்றும் புதைபடிம எரிபொருட்கள் ஆகியவற்றின் காரணமாக மனிதர்களாகிய நாமும், நம் தேவைக்காக வளர்க்கப்படும் கால்நடைகளும் சுற்றுச்சூழலுக்குள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவைக் குறைக்க வேண்டும். இரண்டாவதாக, நாம் வெளியிடும் கரியமில வாயுவை வேறு பயனுள்ள பொருட்களாக மாற்றி மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும். இவை இரண்டையும் மனிதர்களாகிய நாம் செய்யத் தவறினாலும், நாம் வெளியிடும் கரியமில வாயுவில் சுமார் 25 சதவீத அளவை தாவரங்கள் உறிஞ்சி, அதனைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை எனும் இயற்கை நிகழ்வு மூலம் தங்களின் உணவை உற்பத்தி செய்துகொண்டு எந்த கைம்மாறும் எதிர்பார்க்காமலேயே நமக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. ஆனால், நம்முடைய போறாத காலமோ என்னவோ, கரியமில வாயுவை பயன்படுத்தி தாவரங்களால் மேற்கொள்ளப்படும் ஒளிச்சேர்க்கையானது துரதிர்ஷ்டவசமாக, மிகவும் குறைவான வேகம் கொண்ட மற்றும் செயல்திறன் குறைந்த ஒரு உயிரியல் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகத்தான் மனிதர்கள் மற்றும் கால்நடைகளால் சுற்றுச்சூழலுக்குள் வெளியிடப்படும் கரியமில வாயுவின் அளவில் வெறும் 25 சதவீத கரியமில வாயு மட்டுமே தாவரங்களால் உறிஞ்சப்படுகிறது. தாவரங்களின் இந்த ஒளிச்சேர்க்கையை துரிதப்படுத்தினால் எப்படி இருக்கும்? என்று சிந்தித்தது ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் நுண்ணுயிரியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த தலைமை ஆய்வாளர் டோபியாஸ் அர்ப்ன் ஆய்வுக்குழு! அதன் பலனாக, சுற்றுச்சூழலில் உள்ள கரியமில வாயுவை அதிவேகமாக உறிஞ்சி பின்னர் அதனை கரிம சேர்மங்களுக்குள் பொருத்திவிடும் அட்டகாசமான ஒரு செயற்கை ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பத்தை உருவாக்கி அசத்தி இருக்கிறது ஆய்வாளர் டோபியாஸ் அர்பின் ஆய்வுக்குழு! பொதுவாக, ஒளிச்சேர்க்கையின் இரண்டாவது நிலையான கேல்வின் சுழற்சியின்போதே தாவரங்கள் கரியமில வாயுவை உறிஞ்சுகின்றன. அப்படி உறிஞ்சப்படும் கரியமில வாயுவானது ‘ருபிஸ்கோ’ என்சைமின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் ஒரு ரசாயன வினையால் குளுக்கோஸ் எனும் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. ஆனால் இந்த என்சைம் மிகவும் குறைவான வேகத்தில் இயங்கக்கூடியது. மேலும், இந்த ரசாயன மாற்றத்தின்போது பல தவறுகளும் ஏற்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது. உதாரணமாக, கரியமில வாயுவை தண்ணீருடன் இணைத்து சர்க்கரை மற்றும் பிராண வாயுவை உற்பத்தி செய்ய வேண்டிய என்சைம், ஒவ்வொரு ஐந்தாவது கரியமில வாயு மூலக்கூற்றினை பிராண வாயுவுடன் இணைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, கரியமில வாயுவில் குளுக்கோஸ் உற்பத்தியாகும் ரசாயன நிகழ்வானது தாமதப்படும். அதன் விளைவாக, சுற்றுச்சூழலில் இருந்து உறிஞ்சப்படும் கரியமில வாயுவின் அளவும் குறைந்துவிடும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இந்த நடைமுறைச் சிக்கலுக்கு ஒரு தீர்வுகாண, அதிக அளவு கரியமில வாயுவை உறிஞ்சி குளுக்கோஸை உற்பத்தி செய்யக்கூடிய செயற்கையான ஒரு ஒளிச்சேர்க்கை அமைப்பை உருவாக்க முடியுமா என்று முயற்சி செய்தது டோபியாஸின் ஆய்வுக்குழு. அதற்காக, உலகத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்திலும் உள்ள, ஒளிச்சேர்க்கை மேற்கொள்ளக்கூடிய சுமார் 40,000 என்சைம்களை ஆய்வு செய்தனர். இந்த என்சைம்களில் சில மனித உடலில் உள்ள குடல் பாக்டீரியாக்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக, உலகிலுள்ள பல்வேறு வகையான தாவரங்கள், அவற்றின் மீது வாழும் நுண்ணியிரிகள் மற்றும் கடல்களில் வாழும் நுண்ணுயிரிகள் என அனைத்து உயிரினங்களையும் ஆய்வு செய்து, ஒன்பது உயிரினங்களில் உள்ள சுமார் 17 என்சைம்கள் மேலதிக ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. பின்னர் அவற்றின் உதவியுடன் 11 படிகளில் ஒளிச்சேர்க்கையை மேற்கொள்ளும், அதீத செயல்திறன் கொண்ட ஒரு செயற்கை ஒளிச்சேர்க்கை அமைப்பை உருவாக்கினர் டோபியாஸ் அர்பின் ஆய்வுக்குழுவினர். டோபியாஸின் ஆய்வுக்குழுவினரால் கண்டறியப்பட்டுள்ள 17 என்சைம்கள், கரியமில வாயுவை குளுக்கோசாக மாற்றும் இயற்கையான என்சைம்மான ருபிஸ்கோவுடன் ஒப்பிடுகையில் சுமார் 2 மடங்கு வேகமாக செயல்படக்கூடியவை ஈசிஆர் எனும் என்சைம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சோதனைக்கூடத்தில் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ள இந்த 17 என்சைம்கள் நிஜ உலகின் தாவரங்களில் மற்றும் சுற்றுச்சூழலில் எப்படி செயல்படும் என்பது மேலதிக ஆய்வுகள் மூலம் பரிசோதிக்கப்படும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



