Show all

அந்தச் சிறுமி செய்வதறியாது அழத்தொடங்கிவிட்டார்! நல்லவேளை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றினர்

இணையக் கோளாறு காரணமாக ஏழு அகவை சிறுமியின் தவறு காரணமாய், ஒரே நேரத்தில் வீட்டுக்கு வந்து விட்ட நாற்பது கொண்டுதருவோர் (டெலிவரி பாய்ஸ்)

19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இன்றைய கால கட்டத்தில் உலகளவில் இயங்கலை மூலம் பொருட்களை வாங்கும் மக்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர். அதில் அன்றாடம் சமைத்த உணவுகளை வாங்க நேரடியாக கடைக்குச் செல்லாமல், இயங்கலை மூலம் கேட்பு செய்தே வாங்கிச் சாப்பிடும் வகையினரும் அடக்கம். 

இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் 7 அகவை சிறுமி ஒருவர், இயங்கலை மூலம் சமைத்த உணவுக்கு கேட்பு அளித்த நிலையில் சுமார் 40 பேர் அதே உணவுடன் சிறுமியன் வீட்டை ஒரே நேரத்தில் வந்தடைந்துள்ளனர். 

பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு என்னும் பகுதியில் இணையதள வசதி மெதுவாகும், சில நேரத்தில் அறுதியாக கிடைக்காமலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள 7 அகவை சிறுமி ஒருவர் தனது பெற்றோரின் செல்பேசியில் இருந்து புட் பாண்டா செயலி மூலம் தனது உணவுக்கு கேட்பு அளித்துள்ளார். 

அந்த நேரத்தில் இணைய வேகம் மெதுவாக இருந்தால், கேட்பு நிறைவு ஆகவில்லை என நினைத்த சிறுமி மீண்டும் மீண்டும் கேட்புக்கான பித்தானை மீண்டும் மீண்டும் அழுத்தியுள்ளார். இதன் காரணமாக அவரது ஒரே கேட்பு நாற்பதுக்கும் அதிகமாக பதிவாக அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த சிறுமி இருந்த தெருவில் சுமார் 40-க்கும் அதிகமாக உணவு கொண்டுதரும் ஊழியர்கள் அப்பகுதியை சூழ்ந்துள்ளனர். 

உடனே இதனை அறிந்த அந்த சிறுமி அழத் தொடங்கியுள்ளார். தான் தவறுதலாக அப்படி செய்ததை அவர் தெரிவித்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அனைவரும் சேர்ந்து சிறுமி கேட்பு அளித்த உணவு பொருட்களை வாங்கியுள்ளனர். மேலும் இது தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை அப்பகுதியினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.