Show all

தமிழகத்தில் வேதாந்தம்! ஓர் அலசல்

தமிழகத்தில் யானையாக வளர்ந்து, தன் துதிக்கையால் தமிழகத்தை சுழற்றி அடித்துக் கொண்டிருந்த வேதாந்தம், பதினெண் சித்தர்களின் எழுச்சி, திராவிட இயக்கத்தவரின் வளர்ச்சியால் கட்டெறும்பாய்த் தேய்ந்த நிலையில் வேதாந்தம் இரஜினிகாந்தின் அரசியலால் முளைக்கட்டப்படுகிறது; முளைத்து வளருமா வேதாந்தம்! ஓர் அலசல்.

19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் யானையாக வளர்ந்து, தன் துதிக்கையால் தமிழகத்தை சுழற்றி அடித்துக் கொண்டிருந்த வேதாந்தம், பதினெண் சித்தர்களின் எழுச்சி, திராவிட இயக்கத்தவரின் வளர்ச்சியால் கட்டெறும்பாய்த் தேய்ந்தது. தற்போது ஒன்றிய பாஜக வைக்கிற சீனியில் திளைத்து ஆங்காங்கே தமிழர்களை கடித்துக் கொண்டிருக்கிறது. 

தமிழக பாஜகவினரோ ‘சித்தெறும்பு என்ன கடிக்குது’ போன்ற பாடல்களைப்பாடி தமிழர்களைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்னொரு பக்கம் ஆன்மீகம் என்ற தலைப்பில் சில பல அமைப்புகள் மூலம் தமிழகத்தில் கொஞ்சமாக வேதாந்தம் சில பல தமிழர்களை மூளைச்சலவை செய்துவருகின்றன. முதலாவதாக வேதாத்திரி என்னும் முதியவர் ஒருவர், பாமர மக்களுக்கு தியானம், தீட்சை, பஞ்சபூதத் தவம், குண்டலினியோகம் என்று கற்பித்து தமிழகத்தின் பல இடங்களில், கிளைகளை நிறுவி வளர்ந்து வந்தார். அமைப்பினரிடம் ‘வேதாத்திரி மகரிஷி’ என்று உலாவந்த அவர் அண்மையில் காலமாகி விட்ட நிலையில், அந்த அமைப்பும் ஆர்வலர்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து வாழும் கலை, சுதர்ஷன் கிரியா, ஆயுர்வேதம், என்று கற்பித்து ரவிசங்கர் என்பவர் களமிறங்கினார். இவரும் தமிழகம் முழுவதும் ஆர்வலர்கள் சிலரைக் கொண்டு ‘ஸ்ரீஸ்ரீரவிசங்கர்’ என்று அமைப்பினர்களிடம் உலா வந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து வருபவர் ஜக்கி வாசுதேவ். இவர் ஈஷா யோகா, கோவையில் பெரும் நிலப்பரப்பில் ஈஷாயோக தவ மையம், பெரிய பெரிய தலைவர்கள், பேரறிமுக நடிகைகளுடன் சிவராத்திரி நடனம் என்றெல்லாம் அறியப்பட்டு, ‘சத்குரு ஜக்கி வாசுதேவ்’ என்று அமைப்பினரிடம் உலா வந்து கொண்டிருக்கிறார். 

மற்றொருவர் நித்தியானந்தா. இவரும் கொண்டாடிகளுக்கு தியானம், தீட்சை எல்லாம் தந்து கொண்டிருந்தவர்தான். ஒரு எல்லையில் நிறைய சர்சைகளுக்கு உள்ளாகி தற்போது தனக்கென கைலாஷா என்ற ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டு, அந்த நாட்டுக்கு நாணயம் எல்லாம் வெளியிட்டு தொடர்ந்து பரபபரப்பு கிளப்பி வருகிறார். 

அடுத்து தமிழகத்தில் வேதாந்த விதைகளை முளைக்கட்டி பயிர் விளைக்கும் நோக்கத்திற்கு களம் இழுத்துவிடப்பட்டுள்ளவர் இரஜினிகாந்த் அவர்கள். இரஜினியின் நடிப்பில் மகிழ்ந்து, தமிழக மக்கள் தந்த தங்கக் காசுகளால் இரஜினி இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். ஆனால் இமயமலை வரை சென்று- தான் கடைபிடித்து வருகிற தியானத்தால்தான் அவர் வளர்ந்ததாக வோதாந்தவாதிகளால் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார் இரஜினிகாந்த்.

வேதாந்தத்தின் அடிப்படையே ஒரு தலைமையின் கீழ் பெருங்கூட்டம்; இயக்குவது வேதாந்திகள் என்பதுதான். அந்த அடிப்படை ஆண்டான் அடிமைகள், குரு சிஷ்யன், கார்ப்பரேட்டுகள் உழைப்புக் கூலிகள் என்று புதுப்புது தளங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் வேதாந்திகள் இரஜினியைக் களமிறக்குவது பாபாராம்தேவ் மாதிரி குருவாக இல்லை. ஒரு சிஷ்யனாகவே. இரஜினி கலைத்துறையில் தேடிய புகழை வேதாந்தத்தால் தான் சாத்தியமானது என்று நிறுவி வேதாந்திற்கு தமிழகத்தில் மீண்டும் பெருங்கூட்டத்தை திரட்டி, நடுத்தட்டு மக்களின் கூட்டமாக இருக்கிற தமிழகத்தை உழைப்புக் கூலிகளாக முன்னெடுக்கப்படுவதற்கான அரசியலே. 

அரசியலுக்கு இரஜினி வருவார்; இல்லை வர மாட்டார் என்கிற மாறுபட்ட கருத்துகள் நிலவ- தொடர்ந்து இரஜினி வேதாந்திற்கு பிடி கொடுக்காமல் இருந்து வந்த நிலையில்- சரியாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வைத்திருக்கிறது இரஜினிகாந்த்தை வேதாந்த அணி. தமிழக சித்தாந்த அணிகளில் ஒன்றான அதிமுகவும் வேதாந்த வலையில் சிக்குண்டுதான் இருக்கிறது. இனி ஒற்றை ஆளாக திமுகதான் இதை எதிர் கொண்டு சாதிக்க வேண்டும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.