Show all

நேற்று இந்தியா இன்று சீனா! இலங்கைக்கு உதவுவதில் தாராளம்

இந்திய பாஜக அரசும், சீனா கம்யூனிஸ்ட் அரசும் இலங்கைக்கு உதவுவதில் மிகுந்த தாராளம் காட்டுவது, பின்னணி என்னவாக இருக்கும் அச்சதோடே பார்க்கப் படுகிறது.

27,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடிக்கும், இலங்கை தலைமைஅமைச்சர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் அண்மையில் நடத்தப்பட்ட காணொளி கலந்துரையாடலின் போது, இந்தியாவினால் இலங்கைக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க இணக்கம் எட்டப்பட்டிருந்தது.

தற்போது இலங்கைக்கு சீன அரசாங்கத்தினால் 600 மில்லியன் யுவான் நிதியுதவி, அவசரமாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாயில் 1650 கோடி என இலங்கைக்கான சீன தூதரகம் நேற்று அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் அவை உறுப்பினர் தலைமையிலான சீன உயர்மட்ட தூதுக்குழுவொன்று கடந்த வியாழக்கிழமை இரவு இலங்கையை அவசரமாக வந்தடைந்தது. பாலிமரைசு தொடர்வினை பரிசோதனை தவிர்த்த வேறு எந்தவொரு தனிமைப்படுத்தல் சட்டங்களும் இந்தச் சிறப்பு தூதுக்குழுவிற்கு நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அந்தக் குழுவின் உறுப்பினர்கள் நேரடியாகவே நாட்டிற்குள் வருகை புரிந்திருந்தனர்.


இரு நாட்டு உறவுகள், வளர்ச்சி நடவடிக்கைகள், கொரோனா பாடுகள் உள்ளிட்ட மேலும் பல முன்னெடுப்புகள் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக அதிபர் மற்றும் தலைமைஅமைச்சர் அலுவலகங்கள் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உடன்படிக்கையின்படி, இலங்கை மதிப்பில் 1650 கோடி இலங்கை ரூபாய் நிதித் தொகை, உதவியாகவே வழங்கப்படுவதாக இலங்கைக்கான சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கொரோனா தொற்றை எதிர்கொண்டுள்ள இந்த காலப் பகுதியில் கிராமிய பகுதிகளிலுள்ள மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கும், கல்வி மற்றும் நீர்பாசன திட்டங்களை மேம்படுத்துவதற்கும் இந்த நிதித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் பௌத்த மதத்தை மேம்படுத்துவதற்காகவே இந்த நிதியுதவி வழங்க இணக்கம் எட்டப்பட்டதாக தலைமைஅமைச்சர் மஹிந்த ராஜபக்ச தனது கீச்சுத் தளத்தில் தகவல் வெளியிட்டிருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே சீனாவினால் 1650கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

சீனா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள இந்த உதவித்திட்டத்திற்கு, மாற்றீடாக இலங்கை ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற உடன்பாடு இருக்குமேயானால், அது எதிர்காலத்தில் சில சூழ்நிலைகளில் எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் தளத்தின் பேராசிரியர் சங்கரன் விஜயச்சந்திரன் தெரிவிக்கின்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.