நீட் தேர்வு எழுதாதவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பாம். அவர்களுக்கு தேர்வு எதிர்வரும் புதன் கிழமையன்று நடைபெறுமாம். தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை விட்டு வெள்ளிக் கிழமை வெளியீடாம். 26,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சியில் உள்ள பாஜக அரசு அடாவடியாக முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1.17 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். ஆனாலும், கொரோனா தொற்று, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. முன்னதாக, நீட் தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு உச்ச அறங்கூற்றுமன்ற உத்தரவைத் தொடர்ந்து மறு வாய்ப்பு வழங்கும் விதமாக அவர்களுக்கு நாளை மறுநாள் புதன்கிழமை மீண்டும் தேர்வு நடைபெறும் எனவும் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகள் முடிந்த பின்னர் நீட் தேர்வு முடிவுகள் மொத்தமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



