வரலாற்றுச் சாதனை படைத்த யெஸ் வங்கியில் வைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பான வட்டி கடனாளர்களுக்கு கூடுதலான வட்டியாகிப் போனாதால் முதலுக்கே மோசமாகிப்போன சோகம் நிகழ்ந்தது. யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை 26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மும்பையை தலைமையகமாக கொண்டு தொடங்கப்பட்ட யெஸ் வங்கியை, 14 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளுடன், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்களுடன் நாட்டின் 5-வது பெரிய தனியார் வங்கியாக வளர்த்தெடுத்தவர், அதன் நிறுவனர் 62அகவை ராணா கபூர். வரலாற்றுச் சாதனை படைத்த இந்த வங்கியில் வைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பான வட்டி கடனாளர்களுக்கு கூடுதலான வட்டியாகிப் போனாதால் முதலுக்கே மோசமாகிப்போன சோகம் நிகழ்ந்தது. ராணா கபூரின் அந்த முன்னெடுப்பு தற்போது தவறான நிர்வாகமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் பிற வங்கிகளால் கடன் மறுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கூடுதல் வட்டிக்குப் பெருந்தொகையை கடன்களாக கொடுத்தது காரணமாகச் சொல்லப்படுகிறது. வாராக்கடன்கள் பெருகி, யெஸ் வங்கி பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த நிலையில், இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி, யெஸ் வங்கி நிர்வாகத்தை கடந்த வியாழக்கிழமையன்று முடக்கியது. அத்துடன் யெஸ் வங்கியை தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இந்த வங்கி கிளைகளில் வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே திரும்ப எடுக்க கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வங்கி கிளைகளில் பணத்தை திரும்ப எடுக்க வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த வங்கி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்ததில், ராணா கபூரின் குடும்பத்தினருக்கு சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக புகார்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக அமலாக்கத்துறை இயக்குனரகம் நடவடிக்கையில் இறங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூருக்கு சொந்தமான, மும்பை ஒர்லி சமுத்ரா மகால் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தினர். அடுத்த கட்ட விசாரணைக் காக நேற்று முன்தினம் மதியம் அவர் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே கூடுதல் தகவல்கள், ஆதாரங்களை சேகரிப்பதற்காக ராணா கபூரின் 3 மகள்களான ராகீ கபூர் தாண்டன், ரோஷிணி கபூர், ராதா கபூர் ஆகியோருக்கு சொந்தமாக டெல்லி, மும்பையில் உள்ள இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனைகளை நடத்தினர். ராணா கபூர் மனைவி பிந்து, மகள்கள் ராகீ கபூர் தாண்டன், ரோஷிணி கபூர், ராதா கபூர் ஆகியோருக்கும், சில நிறுவனங்களுக்கும் இடையே குற்ற தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் 20 மணி நேர விசாரணைக்கு பின்னர் ராணா கபூரை, நேற்று அதிகாலை சுமார் 3 மணிக்கு மும்பை பாலர்டு சொகுசுமாளிகையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் கைது செய்தனர். வீட்டு வசதி நிதி நிறுவனமான டி.எச்.எப்.எல். நிறுவனத்துக்கு யெஸ் வங்கி வழங்கிய பெரும் கடன், வாராக்கடன் ஆகி இருப்பது தெரியவந்த நிலையில், இந்த டி.எச்.எப்.எல். நிறுவனம், மற்றொரு நிறுவனத்துக்கு ரூ.600 கோடி கடனை வழங்கியது பற்றியும் அமலாக்கத்துறை விசாரிக்கிறது. சில கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பெருமளவுக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு, ராணா கபூர் அவற்றுக்கு பெருமளவு கடன் வழங்கி இருப்பதான கோணத்தில் வழக்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்த லஞ்ச பணத்தை ராணா கபூர் நேரடியாக வாங்காமல் மனைவி மற்றும் மகள்களின் வங்கிக்கணக்குகளில் செலுத்த வைத்ததாகச் சொல்லப்படுகிறது. விசாரணைக்கு பின்னர் ராணா கபூரை மும்பை விடுமுறை கால சிறப்பு அறங்கூற்றுமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அணியப்படுத்தினர். அவரை தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு மனு பதிகை செய்தனர். யெஸ் வங்கியில் நடந்துள்ள முறைகேடுகளில், ராணா கபூர் குடும்பத்தினர் நடத்தி வருகிற நிறுவனங்களின் பங்கு குறித்து விசாரிப்பதற்கு அவரை தங்களது காவலில் எடுத்து விசாரிப்பது கட்டாயம் ஆகிறது என அமலாக்கத்துறை சார்பில் கூறப்பட்டது. ஆனால் ராணா கபூர் தரப்பு வழக்கறிஞர் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்ததாகவும், அவரை வேண்டுமென்றே அமலாக்கத்துறையினர் குறி வைப்பதாகவும் கூறினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட அறங்கூற்றுவர் ராணா கபூரை 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ராணா கபூர் மற்றும் அவரது மகள்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஆதாரங்கள் சிக்கி இருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ள 44 விலை உயர்ந்த ஓவியங்கள், அவர்களது சில போலியான நிறுவனங்கள் பற்றிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும், இவையெல்லாம் இப்போது ராணா கபூரை சிக்கலுக்கு ஆளாக்கி இருப்பதாகவும், அமலாக்கத்துறையின் விசாரணை வளையம் நீள்வதாகவும் கூறப்படுகிறது. சாலையில் முந்திச் செல்கிறவர் மட்டுமல்ல, சந்;தையில் முந்திச் செல்கிறவர்களுக்குக்கூட கடும் விபத்து தொடர்ந்தே வருகிறது என்பது ராணா கபூரின் வாழ்க்கை சந்தையாளர்களுக்கு பாடமாக அமையும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.