இயற்கையை விட்டு தொடர்ந்து விலகிப்போவது, அறிவின் வளர்ச்சி போலத் தெரிந்தாலும், உண்மையில் கொரோனா மாதிரியான வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லப் போகிறது என்பது மட்டும் உண்மை. இங்கேதான்- முயலை வென்ற ஆமைக்கதையை ஏன் நமது முன்னோர்கள் நமக்கு முதல் வகுப்பிலிருந்தே சொல்லி வந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. 20,தை,தமிழ்த்தொடராண்டு-5122: நரம்புத்தொடல் (நியூராலிங்க்) என்னும் தங்களது தொழில்நுட்ப திட்டத்தின் ஒரு பகுதியாக, தலையோட்டில் பொருத்தப்பட்ட சில்லு (சிப்) மூலம் குரங்கொன்று காணொளி விளையாட்டு விளையாடுவதை சாத்தியப் படுத்தியுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப தொழில்முனைவோரான ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நரம்புத்தொடல் என்னும் இவரது புதிய நிறுவனம், மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், குரங்கு ஒன்றின் தலையோட்டில் கம்பியில்லாமல் தகவலைக் கடத்தும் கருவியைப் பொருத்தியுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இணைய வழியே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஈலோன் மஸ்க் அறிவித்துள்ளார். நரம்புத்தொடல் நிறுவனத்திடம், தலையோட்டில் சிறு கம்பியில்லா கருவி பொருத்தப்பட்ட குரங்கொன்று உள்ளது என்று கூறியுள்ளார். அதாவது, மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் நரம்புத்தொடல் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை இந்தக் குரங்கின் வாயிலாக பரிசோதித்து வருகின்றனர். ‘உங்களால் அந்த சில்லு எங்கு பதியப்பட்டுள்ளது என்பதை காண முடியாது. அது மிகவும் மகிழ்ச்சியான குரங்கு’ என்று கூறிய மஸ்க், இந்தத் திட்டம் குறித்த மேலதிக அறிவிப்புகள் வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். இதுபோன்ற வேறுபட்ட திட்டத்தை ஈலோன் மஸ்க் மேற்கொள்வது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தனது தொழில்நுட்ப திட்டத்தை நிரூபிக்கும் வகையில், மூளையில் கணினிச்சில்லு பொருத்தப்பட்ட பன்றியை ஈலோன் மஸ்க் அறிமுகப்படுத்தி இருந்தார். மனித மூளையையும் இயந்திரங்களையும் இணைக்கும் இதுபோன்ற இடைமுகம், நரம்பியல் குறைபாடு உள்ளவர்கள் தங்களது மூளை மூலம் மிடுக்குப்பேசிகள் அல்லது கணினிகளை கட்டுப்படுத்த வழிவகை செய்யும் என்று மஸ்க் கூறுகிறார். அதுமட்டுமின்றி, பிற்காலத்தில் மறதி நோய், பார்கின்சன் நோய் மற்றும் முதுகெலும்பு காயங்கள் போன்ற நிலைமைகளை குணப்படுத்த இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார். இந்தத் திட்டத்தின் நீண்டகால நோக்கமே, ‘மனிதர்களுக்கு மேற்பட்ட அறிவாற்றல் யுகம்’ என்று கூறும் எலான் மஸ்க், அத்தகைய ஒரு யுகத்தில் செயற்கை நுண்ணறிவு மனித குலத்தை அழிக்கும் அளவுக்கு பலம் பெற்றுவிடும் என்றும் அப்போது அதை எதிர்த்துப் போராடுவதற்கு தயாராக வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், உருவாக்கும் சாதனம் ஒரு மனித தலைமுடியை விட மெல்லிய நெகிழ்வான நூல்களுடன் இணைக்கப்பட்ட 3,000க்கும் மேற்பட்ட மின்முனைகளைக் கொண்டுள்ளது. இதனால் 1,000 மூளை நரம்பணுக்களின் செயல்பாட்டைக் கண்காணிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. இயற்கையை விட்டு தொடர்ந்து விலகிப்போவது, அறிவின் வளர்ச்சி போலத் தெரிந்தாலும், உண்மையில் கொரோனா மாதிரியான வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லப் போகிறது என்பது மட்டும் உண்மை. இங்கேதான்- முயலை வென்ற ஆமைக்கதையை ஏன் நமது முன்னோர்கள் நமக்கு முதல் வகுப்பிலிருந்தே சொல்லி வந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.