அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்த சொலவடையாக தமிழகத்தில் கால் பதிக்கவென்று, தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசை மிரட்டி பணியவைத்து, தமிழகத்திற்குத் தேவையில்லாத முன்னெடுப்புகளைக் கொண்டாடி தமிழக மக்களின் வெறுப்பையே மேலும் மேலும் ஈட்டுகிறது ஒன்றிய பாஜக அரசு. இத்திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரியும், திட்டத்தை விலக்கிக் கொள்ளக் கோரியும், ஐந்து மாவட்ட உழவர்கள், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் உள்பட பலரும் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எட்டு வழிச் சாலைக்காகக் கையகப்படுத்திய நிலங்களை, எட்டு கிழமைகளில் மீண்டும் உரிமையாளர்களின் பெயரிலேயே பதிவு செய்ய வேண்டும். வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை, எட்டு கிழமைகளில் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இந்தத் திட்டத்துக்காக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், என்று உயர்அறங்கூற்றுமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே, எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. சென்னை உயர் அறங்கூற்றுமன்ற உத்தரவுக்கு எதிராக ஒன்றிய அரசின் ஒன்றிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உழவர்கள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் முன்னெச்சரிக்கை மனுக்களும் பதிகை செய்யப்பட்டன. சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தச் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை தொடரும். எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை நீக்கம் செய்யப்படுகிறது. அனால் எட்டு வழிச்சாலை திட்டத்துக்குத் தடை இல்லை. மீண்டும் நிலம் கையகப்படுத்த ஒன்றிய அரசு புதிய அரசாணையை வெளியிட வேண்டும். குறிப்பிட்ட அந்தந்தத் துறைகளில் அனுமதி பெற்று முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எட்டு வழிச்சாலை திட்டத்தைப் புதிதாகத் தொடங்கிக் கொள்ளலாம். நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது உச்சஅறங்கூற்றுமன்றம். இந்நிலையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் வெளியிட்டுள்ள வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டம் இந்த ஆண்டில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இப்போது இந்த அறிவிப்பு இப்பகுதி மக்களைக் கலக்கமடையச் செய்திருக்கிறது. இனி வரும் காலங்களில் எட்டு வழிச் சாலையைத் தொடங்குவதாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்திருப்பதற்கு எட்டு வழிச் சாலை எதிர்ப்புக் குழுவின் சார்பாகக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போது மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் இனி எட்டு வழிச் சாலை திட்டத்தை இங்கு தொடங்குவது முடியாத செயல். மீறிச் செயல்படுத்த நினைத்தால் அரசுக்கு மிகுந்த சிக்கலை உண்டாக்கும். இங்கு சாலை அமைப்பது பொதுவான மக்களுக்காக கிடையாது என்பதை முன்பிருந்தே சொல்லி வருகிறோம். எட்டு வழிச் சாலை தொழிலதிபர்களுக்கானது, கனரக வாகனங்களுக்கானது. எட்டு வழிச் சாலை திட்டத்தை அறிவித்திருக்கும் அரசு ஒருமுறை இப்பகுதியை வந்து பார்க்கட்டும். இப்போது எங்குப் பார்த்தாலும், மஞ்சள், வாழை, தென்னை எனக் காஞ்சிபுரம் முதல் சேலம் வரைக்கும் பசுமையாக நிற்கிறது. இதையெல்லாம் அழிப்பது பல உழவர்களை அழிப்பதற்குச் சமம். வேளாண் நிலங்கள் தவிர, மலைகளைக் குடைந்து சாலை அமைப்பது வேறு இருக்கிறது. இவ்வளவு சீர்கேடுகளைச் செய்துவிட்டு இந்தச் சாலையை யாருக்காக அமைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. வேளாண்மண்ணான தமிழ்நாட்டை அழிக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு அதிமுக அரசு துணைபோகாமல் இருக்க வேண்டும். என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
20,தை,தமிழ்த்தொடராண்டு-5122: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னை - சேலம் இடையே எட்டு வழிச் சாலை திட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாகச் சாலை அமைக்க ஒன்றிய அரசு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதற்காகச் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, முதல்கட்டப் பணிகளையும் தொடங்கியது. பல இடங்களில உழவர்களின் நிலங்களில் எல்லைக்கற்கள் நடப்பட்டன. இதனால், அப்பகுதி உழவர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கினர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.