Show all

இந்தியாவில் 75 அகவை கடந்தவர்களுக்கு நிதிநிலை அறிக்கையில் சலுகை! ஓர் அலசல்

இந்திய நிதிநிலை அறிக்கையில், 75 அகவைக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி கணக்கைப் பதிகை செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அல்ல என்று புரிந்து கொள்ள இந்த அலசல் தேவைப்படுகிறது.

21,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய நிதிநிலை அறிக்கை கடந்த திங்கட்கிழமை பதிகை செய்யப்பட்ட நிலையில் அதில், 75 அகவைக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி கணக்கைப் பதிகை செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அல்ல. 

ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் பதிகை செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 75 அகவைக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின்- கணக்கு பதிகை செய்யும் சிரமத்தை குறைக்க முடிவு செய்திருக்கிறோம். ஆகவே, ஓய்வூதியம் மற்றும் வட்டி மட்டுமே பெற்றுக்கொண்டிருக்கும் 75 அகவைக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரிக் கணக்கைப் பதிகை செய்யத் தேவையில்லை. அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியே வரியைக் கணக்கிட்டு அவர்களிடம் பிடித்தம் செய்து செலுத்திவிடும் என்று குறிப்பிட்டார்.

நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு தொடர்பாக சிலர் ஐயங்களை எழுப்பினர். ஒருவர் சிறு சிறு வேலைகளைப் பார்த்து, கிடைக்கும் பணத்திற்கு முன்பே வருமான வரி பிடிக்கப்பட்டு, மீதிப் பணம் மட்டுமே அனுப்பப்பட்டால், கணக்கைத் பதிகை செய்யாமல் அவற்றைப் பெறுவது எப்படி என்று.

இந்தச் சலுகை என்பது ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருப்பவர்களுக்கும், பணத்தை வங்கியில் முதலீடு செய்துவிட்டு, வட்டி பெறுபவர்களுக்கும் மட்டும்தாம் பொருந்தும். மற்றவர்களுக்குப் பொருந்தாது என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.

இந்த சலுகையின்படி, 75 அகவைக்கு மேற்பட்டவர்கள் ஓய்வூதியமும் வட்டியும் மட்டும் பெற்றுக்கொண்டிருந்தால், அவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று பொருள் அல்ல. மாறாக, அவர்கள் செலுத்த வேண்டிய வரியை அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியே பிடித்தம் செய்து செலுத்திவிடும். 75 அகவைக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கணக்கைப் பதிகை செய்ய வேண்டியதில்லை, அவ்வளவுதான் என்கிறார் மூத்த வரி ஆலோசகரான வைத்தீஸ்வரன்.

இந்தச் சலுகையைப் பெறுவதற்கு ஒருவர்:
1. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டில் 75 அகவையைக் கடந்திருக்க வேண்டும்.
2. அவருக்கு வரி வருவாயைத் தவிர வேறு வருவாய் இருக்கக்கூடாது. ஆனால், எந்த வங்கியில் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறதோ, அதே வங்கியில்தான் வட்டியும் வர வேண்டும்.
3. எந்தெந்த வங்கிகளில் இந்த கணக்குகளை வைத்திருக்கலாம் என்பதை விரைவில் ஒன்றிய பாஜக அரசு அறிவிக்கும்.
4. எழுபத்தைந்து அகவைக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த வங்கிகளுக்குச் சென்று இதற்கான தகவல்களையும் ஒப்புதல்களையும் தர வேண்டும். அவை எந்த வடிவில், என்னென்ன தகவல்களுடன் இருக்க வேண்டும் என்பதை ஒன்றிய பாஜக அரசு விரைவில் அறிவிக்கும்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்தியாவில் கடந்த ஆண்டு கணக்குப்படி 75 அகவைக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை இருபத்தி ஒன்பதாயிரம் பேர்கள் மட்டுந்தாம். நடப்பு ஆண்டில் கொரோனாவில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்கள் என்பதை தனியாகக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். 

இந்தியாவில் ஆண்டுக்கு 50 இலட்சத்திற்கு மேல் சம்பாதிக்கும் ஆட்கள் ஒரு விழுக்காட்டினர்தாம். இந்தியாவில் வருமானவரி செலத்தும் வாய்ப்புக்கே வராமல் ஆண்டுக்கு 2.5 இலட்சத்திற்கு குறைவாக சம்பாதிப்பவர்கள் 57 விழுக்காட்டினர் ஆவர். ஆக கூட்டி கழித்துப் பார்த்தல் இந்தியா முழுவதும் ஒன்றிய பாஜக அரசின் இந்த ஆண்டுக்கு ஒரு முறை செய்யக்கூடிய வருமான வரிப் பதிகையை செய்ய வேண்டாம் என்பதற்கான, அரைக்காசுக்கும் உதவாத, இந்தச்  சலுகையில் ஒரு இரண்டாயிரம் பேர்கள் பயனடையக் கூடும் என்று தெரியவருகிறது. 

மக்களைக் கூலிக்காரர்களாக மிதிக்கும் மிகச்சிறந்த கார்ப்பரேட் சிந்தனை அரசு. இவர்களை உண்மையிலேயே மக்கள்தாம் ஒன்றிய ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கிறார்களா என்பது- புரியாத புதிராகவே உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.