01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அரசு, தமிழீழ இறுதி யுத்தத்திற்காக உலக நாடுகளின் ஒத்துழைப்பைக் கேட்டுப் பெற்ற போது, இலங்கை தமிழர்களை சிங்களர்களுக்கு சமமான தகுதியுடன் நடத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் போரின் போது தமிழர் பகுதிகளில் நிறுத்திய இராணுவத்தை போர் முடிந்து ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் திரும்பப் பெறவில்லை; சட்டம் ஒழுங்கை காத்துக் கொள்வதற்கு வடமாகணத்திற்கு காவல்துறை அமைத்துக் கொள்வதற்கான உரிமையையும் தரவில்லை. இந்த நிலையில், விடுதலை புலிகள் காலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததே என்று தமிழர்கள் ஆதங்கப் படுவதற்கு கூட உரிமை இல்லாதது போல ஈழத் தமிழர்களிடையே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு அதிகரித்துள்ளதா? என இலங்கை அரசு திடீர் ஆய்வு நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு முந்தைய இறுதி யுத்தத்துக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து ஈழத் தமிழர்கள் பேச இயலாத நிலை இருந்து வந்தது. தமிழர்கள் கடைபிடித்து வந்த மாவீரர் நாள் நிகழ்வுகளும் வெளிப்படையாக நடத்த முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது அப்படியான நிலைமை தமிழர்களிடம் இல்லை. மாவீரர் நாள், கரும்புலிகள் நாள் ஆகியவை பகிரங்கமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பேச்சும் அதிகரித்துள்ளது. அண்மையில் அமைச்சராக இருந்த விஜயகலா, தமிழீழ விடுதலைப் புலிகளின் தேவை குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்து அவரது பதவியைப் பறித்தது. அதேபோல விடுதலைப் புலிகள் இயக்க தளபதிகள் திலீபன், கிட்டு ஆகியோரது சிலைகளை சீரமைக்கக் கோரி யாழ்ப்பாண மாநகரசபையில் உறுப்பினர்கள் தீர்மானமும் நிறைவேற்றினர். இப்படி தமிழர்களிடம் மீண்டும் அதிகரித்து வரும் விடுதலைப் புலிகள் ஆதரவு நிலை இலங்கை அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதையடுத்து தமிழர்களின் இந்த மனோநிலை குறித்து ஆராய இலங்கை அரசு உயர்நிலைக் குழு ஒன்றை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அண்மையில் அனுப்பி வைத்தது. இக்குழுவில் சட்டம் ஒழுங்கு அமைச்சர், சட்டம் ஒழுங்கு இணை அமைச்சர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தமிழர்களிடையேயான புலிகள் ஆதரவு நிலையை தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்து வருகிறதாம். இந்த நிலையில், மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப் படுத்துவது குறித்த இலங்கை அரசின் சிந்தனை ஐரோப்பிய நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. மரணதண்டனையை மீண்டும் அமுல் படுத்தினால் வர்த்தக ரீதியான சலுகைகளை இலங்கை இழக்க நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியிருந்தன. இந்த நிலையில் மரண தண்டனையை இலங்கை மீண்டும் நடைமுறைப்படுத்தினால் தங்களால் வழங்கப்பட்டு வந்த வர்த்தக ரீதியான சலுகைகளை இலங்கை இழக்க நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. மரண தண்டனையை மீண்டும் நிறைவேற்றினால் 28 ஐரோப்பிய நாடுகளில் இலங்கை பெற்றிருக்கும் ஏற்றுமதிக்கான முன்னுரிமை வாய்ப்புகள் பறிபோகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,851.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



