01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகம் வறட்சி காலத்தில் நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு, தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுக்கும் போதெல்லாம் அவர்கள் தேக்கிய நீரே ஆவியாகி கூடுதல் மழை பொழிவிற்கு காரணமாகி தமிழகத்திற்கு நீர் அனுப்பி உதவுவது இயற்கையின் வாடிக்கை. அந்த வகையாக இந்த ஆண்டு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் சுமார் ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ககனசுக்கி, பரசுக்கி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோல் ராமநகர் மாவட்டம் ஆடுதாண்டும் காவிரியில், மலைமுகடுகளில் காவிரி ஆற்று நீர் பாய்ந்தோடி வருகிறது. இதை பார்க்க கடந்த சில நாட்களாக அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். மேலும் ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தை செல்பேசியில் படம் பிடித்தும் தம்படம் எடுத்தும் மகிழ்கிறார்கள். இந்நிலையில் பீதர் மாவட்டத்தை சேர்ந்த 29 அகவையுள்ள இரண்டு பொறிஞர்கள் சமீர் ரகுமான் மற்றும் பவானி சங்கர் வெள்ளப்பெருக்கை காண சென்றனர். ஆடுதாண்டும் காவிரியில், ஒரு பாறை மீது ஏறி நின்று சமீர் ரகுமான் காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்து செல்லும் காட்சியுடன் தம்படம் எடுத்துள்ளார். அப்போது கால் தவறி சமீர் ரகுமான் காவிரி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்த நண்பர் பவானிசங்கர் ஆற்றில் குதித்து, சமீர் ரகுமானை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் காவிரி ஆற்றில் சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரைபுரண்டோடும் வெள்ளத்தில் 2 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் 2 பேரும் உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களது உடல்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஆடுதாண்டும் காவிரி பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால் தம்படம், புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,851.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



