Show all

இந்தியாவால் தப்பியது! பிரிட்டனில் அகற்றப்படவிருந்த இராபர்ட் கிளைவ் சிலை

பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தால் அவதியுற்ற இந்தியாவிலேயே கிளைவ் சிலை அகற்றப்படவில்லை. ஆக பிரிட்டனில் ஏன் அகற்ற வேண்டும் என அறங்கூற்றுவர் கிளைவ் சிலையை ஷ்ரூபெரீஸ் சதுக்கப் பகுதியில் இருந்து அகற்ற மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டனர்.

05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்றைக்கு, 220லிருந்து 295ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ், வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு பிரித்தானிய அதிகாரி ஆவர். இந்தியத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்சும் படைத்தலைவர் இராபர்ட் கிளைவும் பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முதன்மையான நபர்களாகக் கருதப்படுகின்றனர்.

இவர் மீது இந்தியர்கள் பலருக்கு அதிருப்தி உள்ளது உண்மை. ஆனால் இந்தியாவிலும் இவருக்கு சில ஆதரவாளர்களும் உள்ளனர். இதற்கு உதாரணமாக கோல்கட்டாவில் இவருக்கு சிலை உள்ளது.

பிரிட்டனில் தொழிலாளர் கட்சி இந்தியாவில் அடிமைத்தனத்தை ஊக்குவித்த தங்கள் நாட்டைச் சேர்ந்த பிரபு கிளைவ் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அதே சமயத்தில் தற்போதைய ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி ராபர்ட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
பிரிட்டனின் ஷ்ரூபெரீஸ் சதுக்கப் பகுதியில் 160 ஆண்டுகளுக்கு முன்பு கிளைவுக்கு சிலை வைக்கப்பட்டது. பின்னாட்களில் இந்த சிலை பாதுகாக்கப்படவேண்டிய தொல்பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

தற்போது ஜார்ஜ் புளாயிட் படுகொலையை அடுத்து ‘பிளாக் லைப் மேட்டர்ஸ்’ அமைப்பு பிரிட்டனில் அறிமுகமடையத் தொடங்கியுள்ளது. அடிமைத்தனத்தை ஊக்குவித்த பெரும் செல்வந்தர்களின் சிலை பிரிட்டனின் முதன்மைப் பகுதிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என இந்த அமைப்பின் உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். அதற்கு இவர்கள் நீக்கப்படவேண்டிய சிலைகள் என்பதான பட்டியலும் தயாரித்துள்ளனர். 

சில நாட்களுக்கு முன்னர் பிரிட்டனின், பிரிஸ்டல் பகுதியில் அடிமைத்தனத்தால் வளமாக வாழ்ந்த செல்வந்தரான எட்வர்டு கால்ஸ்டன் சிலை உடைக்கப்பட்டு கடலில் வீசப்பட்டது. இதற்கு போரிஸ் ஜான்சன் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஷ்ரூபெரீஸ் சதுக்கப் பகுதியிலுள்ள ராபர்ட் கிளைவின் சிலையும் அகற்றபடவேண்டும் என இந்த அமைப்பு வழக்கு தொடர்ந்தது. பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தால் அவதியுற்ற இந்தியாவிலேயே கிளைவ் சிலை அகற்றப்படவில்லை. ஆக பிரிட்டனில் ஏன் அகற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனை ஏற்ற அறங்கூற்றுவர் கிளைவ் சிலையை ஷ்ரூபெரீஸ் சதுக்கப் பகுதியில் இருந்து அகற்ற மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டனர்.

இப்போதைக்கு இந்தியாவில் அகற்றப்பட வேண்டிய சிலையாக சிலரால் கருதப்படுவது பெரியார் சிலையாக இருக்கலாம். ஆனால்- தமிழர்கள் அடிமைத்தளையை நொருக்கும் முயற்சியில் களம் கண்டவர் பெரியார். ஆதிக்கவாதிகளுக்கு வல்வில் ஓரியின் அம்பாய் வலிமையானவர் பெரியார் என்கிற காரணத்தால்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.