Show all

அதிக விலையுள்ள மின்சக்தி காரை ஏன் வாங்க வேண்டும்? மக்கள் கேள்வி. கனடா நாட்டு கேனா மின்சக்தி காரில் திடீரென தீவிபத்து

விபத்து வாய்ப்பும் உள்ள, அதிக விலையுள்ள மின்சக்தி காரை ஏன் வாங்க வேண்டும் என்ற கேள்வியை முன் வைக்கின்றனர் மக்கள். அச்சத்தைப் போக்க வேண்டும் மின்சக்தி கார் தயாரிப்பு நிறுவனங்கள்.

15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  இந்தியாவில் எரிபொருள் பயன்பாட்டை தவிர்த்து மின்சக்தி வாகன பயன்பாட்டை அதிகபடுத்த தீவிரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. 

இந்த நிலையில், கடந்த மாதம் இந்தியாவின் முதல் மின்சக்தி காரான ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எஸ்.யூ.வி. அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரில் ஒரு முறை மின்னேற்றம் செய்தால் 452 கிமீ வரை பயணித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்சக்தி காரின் விலை 25.30 லட்சம் ரூபாய்.

ஏற்கெனவே இந்தியாவில் சில மின்சக்தி கார்கள் விற்பனையில் இருந்தாலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஹூண்டாயின் கோனா மக்களை கவர்ந்துள்ளது. விலை அதிகம் என்பதால் மட்டுமே மக்கள் கோனா காரை வாங்குவதில் சற்று தயக்கம் காண்பித்து வந்த நிலையில், அண்மையில் மின்சக்தி வாகனங்கள் மீதான சரக்கு-சேவை வரியை 12 விழுக்காட்டில் இருந்து 5விழுக்காடாக குறைத்தது நடுவண் அரசு. இதனால் கோனா காரின் விலை 1.50 லட்சம் ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில்தான் கனடா நாட்டு கேனா கார் மாடலில் நடந்த விபத்தால் மக்கள் சற்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கனடாவின் மாண்ட்ரியல் என்ற பகுதியில் உள்ள வீட்டின் முன் காருக்கான இடத்தில் நிறுத்திவைக்கப்பட்ட ஹூண்டாய் கோனா கார் வெள்ளிக் கிழமை யன்று வெடித்து விபத்துக்குள்ளனது.

இது தொடர்பாக காரின் உரிமையாளர் பியாரோ கோசெண்டினோ, கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து கரும்புகை வந்ததை அடுத்து, கார் தீப்பற்றி எரிவதை பார்த்து, தீயணைப்புத் துறைக்கு தகவலளித்தாகவும், 30 தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தியதாகவும் தெரிவித்தார். அதில், நல்வாய்ப்பாக எவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. என கூறினார்.

விபத்து குறித்து அந்நாட்டு காவல் துறையினரும், ஹூண்டாய் நிறுவனமும் விசாரித்து வருகின்றனர். மின்சக்தி கார்களில் உள்ள லித்தியம் இயான் மின்கலன்கள் அதிகபடியான வெப்பத்தின் தாக்கத்தால் தீப்பற்றியிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இதனையறிந்த இந்திய வாடிக்கையாளர்கள்: விபத்து வாய்ப்பும் உள்ள, அதிக விலையுள்ள மின்சக்தி காரை ஏன் வாங்க வேண்டும் என்ற கேள்வியை முன் வைக்கின்றனர். அச்சத்தைப் போக்க வேண்டும் மின்சக்தி கார் தயாரிப்பு நிறுவனங்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,230.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.