நடப்பில் ஆட்சியேற்றிருக்கிற நடுவண் பாஜக அரசு, பல புதிய சட்டமுன்வரைவுகளை நிறைவேற்றியதில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வேகம் கொண்டிருப்பதால், எதிர்க்கட்சிகள் அதல் நியாயம் இருக்க முடியாது என்று கொதித்தெழுகின்றன. 16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின் ஒட்டுமொத்த சட்டங்களும் பிரித்தானிய இந்தியாவில், இந்தியப் போராட்டங்களின், பல மொழிகள்- பன்முக கலாச்சாரங்கள்- பலவகை மனப்போக்குகள் கொண்ட இந்திய மக்களின், இந்திய ஆட்சியாளர்களின் கேட்புகள் அடிப்படையில், பிரித்தானிய மேலாளுமைக்கு பங்கம் வராத வகையில், பிரித்தானிய ஆட்சியாளர்களின் தீர்மானத்தில் உருவானவைகள். அவைகளேதாம் இந்தியாவை இன்று வரை அடிப்படையாக நிர்வகித்து வருகின்றன. அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக நேற்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களாலும், இன்றைய பாஜக ஆட்சியாளர்களாலும் மாற்றம் செய்யப் பட்டு வருகின்றன. காங்கிரசைப் பொறுத்த வரை இந்திய விடுதலைக்காக உருவான கட்சி. இந்திய விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் என்று சொன்னார் காந்தியார் அவர்கள். காங்கிரஸ் கட்சியில் பெருவாரியாக அதிகாரத்தில் இருந்த பார்ப்பனிய சமூகம் ஆட்சிக்காக காங்கிரஸ் கட்சியை கலைக்காமல் வைத்துக் கொண்டது. பிரித்தானிய இந்தியாவில் மன்னராட்சிப் பகுதிகள், மற்றும் மாநிலங்கள் பெற்றிருந்த உரிமைகளைப் பறிப்பதற்கும், வடக்கினரின் மொழியான ஹிந்தியை வளர்ப்பதற்கும், பேசாதவர்கள் மீது திணிப்பதற்கும் மட்டுமே சட்ட மாற்றங்களைச் செய்தது காங்கிரஸ். நேற்று காங்கிரசில் அதிகாரத்தில் இருந்த அதே ஆட்கள் தான் இன்றைக்கு பாஜகவையும் முன்னெடுக்கின்றனர். அவர்கள் அனுபவத்தில் கூடுதல் ‘அதிகாரஅறிவை’ பெற்றவர்களாக இன்னும் கூடுதலாகச் சிந்தித்து, கார்ப்பரேட் கம்பெனிகள், ஹிந்தி, ஹிந்துத்துவா, நடுவண் அரசில் அதிகாரக் குவிப்பு என்பதாக சட்டமாற்றம் செய்து வருகின்றார்கள். அதை எதிர்ப்பவர்களை தேசத் துரோகியாக சித்தரிக்கும் கலையைச் சிறப்பாக பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் நடப்பில் ஆட்சியேற்றிருக்கிற நடுவண் பாஜக அரசு, பல புதிய சட்டமுன்வரைவுகளை நிறைவேற்றியதில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வேகம் என்றே சொல்லலாம். இரண்டாவது முறை ஆட்சி; 303 உறுப்பினர்கள் எனப் பெரும்பான்மை பலத்தில் இருக்கும் பா.ஜ.க 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரை வரவு-செலவு பதிகையுடன் தொடங்கியது. எந்தமுறையும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான ‘சட்டமுன்வரைவுகளை’ நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. கடந்தமுறை பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருந்தாலும் மாநிலங்களவையில் போதுமான உறுப்பினர்கள் இல்லாததால் ‘சட்டமுன்வரைவுகளை’ நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டியது. ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை. மாநிலங்களவையிலும் தற்போது பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்டுள்ளதால் கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாத ‘சட்டமுன்வரைவுகளை’ எல்லாம் தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றது. இதைக் கடந்த 15 ஆண்;டுகளில் இல்லாத வேகம் என்றே சொல்லலாம். தற்போது தொடங்கியுள்ள இந்தக் கூட்டத்தொடரில் தகவல்அறியும் உரிமைச் சட்டத் திருத்தம், முத்தலாக், சுங்கச்சாவடி, என்.ஐ.ஏ என இதுவரை 20-க்கும் அதிகமான ‘சட்டமுன்வரைவுகளை’ மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட மொத்த ‘சட்டமுன்வரைவுகள்’ எண்ணிக்கை 14. இன்னும் 10 ‘சட்டமுன்வரைவுகள்’ விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட ‘சட்டமுன்வரைவுகள்’ அனைத்துக்கும் எதிர்க்கட்சி தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழாமல் இல்லை. ‘சட்டமுன்வரைவுகள்’ உரிய ஆய்வு செய்த பிறகே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி எதிர்த்தாலும், அந்த எதிர்ப்புகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு பாஜக அரசு இப்படிச் செய்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் நடுவண் அரசின் இந்த நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், நாடாளுமன்றம் அனைத்து ‘சட்டமுன்வரைவுகளையும்’ ஆராய வேண்டும். ஆனால் தற்போது நடைபெற்றுவரும் அமர்வு அதை அழித்து வருகின்றது. நாம் பீட்சா விநியோகம் செய்கிறோமோ அல்லது சட்டத்தை நிறைவேற்றுகிறோமா?" எனக் கேள்வி எழுப்பியதுடன் கூடவே தனது கீச்;சுவில் கடந்த ஆட்சிகளில் நிறைவேற்றப்பட்ட ‘சட்டமுன்வரைவுகள்’ குறித்து ஒரு விளக்கப் படத்தையும் வெளியிட்டுள்ளார். கடந்த கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய பிரையன், இதே கருத்தைக் கூறினார். அதில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பாஜக அரசு செயல்படுகிறது. ‘சட்டமுன்வரைவுகளை’ நாடாளுமன்றம் ஆராய வேண்டும். ஒரு ‘சட்டமுன்வரைவை’ ஆராய்வதற்கான நேரம் தேவை. நாம் டி -20 போட்டியில் விளையாடவில்லை' எனக் கடுமையாகப் பேசியிருந்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,231.
மேம்போக்காகப் பார்த்தால், விடுதலை பெற்ற இந்தியாவில் பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா, பிரித்தானிய சட்டங்களை மாற்றிக் கொள்வது சரிதானே என்கிற கேள்வி மிக மிக நியாயமானதாகவே தோன்றும்.
ஆனால் மாற்றம் எத்தகையதாக இருக்கிறது என்பதுதான் கேள்வி. மாற்றத்தால் இந்தியாவின் போக்கு எதை நோக்கியதாக இருக்கப் போகிறது என்பதுதான் கேள்வி.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.