Show all

ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் கவலை! ஜெனிவாவில் மனித உரிமைப் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடரில் எதிரொலிப்பு- டெல்லி வன்முறை

ஜெனிவாவில் மனித உரிமை பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய, ஐ.நா மனித உரிமைகள் குழுவின் ஆணையரான மிசேல் பெசலட் இந்தியாவில் நடந்துவரும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் டெல்லி வன்முறை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜெனிவாவில் மனித உரிமை பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய, ஐ.நா மனித உரிமைகள் குழுவின் ஆணையரான மிசேல் பெசலட் இந்தியாவில் நடந்துவரும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் டெல்லி வன்முறை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் உலகெங்கும் உள்ள நாடுகளில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் அனைத்து நாடுகளிலும் மனித உரிமைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது இந்தியா குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் 370-ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்த அரசின் முடிவுக்கு பிறகு ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் அண்மைய டெல்லி கலவரங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச்சட்டம் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் இந்த சட்டத்துக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று மிசேல் தெரிவித்ததாக செய்தி வெளியாகியிருக்கிறது.

டெல்லியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியபோது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் முன்பு தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்துக்கு எதிராக அமைதியாக போராடியவர்களை கட்டுப்படுத்த அதிக அளவில் காவல் படைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் வரும் செய்திகளால் நான் கவலை அடைகிறேன். கடந்த ஞாயிறு முதல் அங்கு நடந்த வன்முறையில் 34 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது இது மதக்கலவரமாக உருவெடுத்துள்ளது. வன்முறையை தடுக்க அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் மேலும் கூறியதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

ஐ.நா. ஆணையரின் பேச்சுக்கு பதிலளித்த இந்திய பிரதிநிதி:- உலகெங்கும் மனித உரிமைகளை பாதுகாக்க ஐ.நா மனித உரிமைகள் குழு மற்றும் ஆணையத்துக்கு தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்போம் என்று தெரிவித்தார்.

மேலும் மக்களாட்சியில் நம்பிக்கை கொண்டுள்ள இந்தியாவில் வன்முறைக்கு எந்த இடமும் இல்லை. டெல்லியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவும், மீண்டும் இயல்புநிலை திரும்பவும் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம் என்றும் இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.