மக்களுக்கும், மாநிலங்களின் அதிகாரத்திற்கும் அடுத்த ஆப்;பை வடிமமைக்கத் தொடங்கி விட்டது நடுவண் பாஜக அரசு. இந்தியா முழுவதும் மின்சாரத்திற்கு ‘முன்னதாக கட்டணம் வாங்கும் முறை’யை அமல்படுத்த 1.5 லட்சம் கோடி ரூபாயில் மாபெரும் திட்டமாம். 16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆதாயம் இல்லாமல் வணிகன் ஆற்றோடு போக மாட்டான் என்று ஒரு தமிழ்ச் சொலவடை உண்டு. நடுவண் பாஜக அரசு அது ஒரு கார்ப்பரேட் அரசு என்று மீண்டும் மீண்டும் நிறுவிக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு முன்னெடுப்பிலும் தான்ஒரு கார்ப்பரேட் அரசு என்பதாக:- மக்கள் நலம் குறித்த ஒற்றைக்காசு அளவிற்கு கூட அக்கறை கொள்ள மறுக்கிறது. மக்களை அலைகழிப்பதில் வணிகத்தனமாக கிஞ்சித்தும் கவலை கொள்ள மறுக்கிறது. அந்த வகையில்தான்- எலிக்குப் பயந்து கூரையைக் கொளுத்திய கதையாக, கள்ள ரூபாய்தாள், கருப்புப் பணம் ஒழிக்கிறேன் என்று வெட்டி செலவு செய்து, பணமதிப்பிழப்பு செய்து மக்களை அலைகழித்தது இந்தக் கார்ப்பரேட் அரசு? எத்தனை உயிர்கள் பலியாகின? எவ்வளவு நாட்கள் மக்கள் அல்லல் பட்டார்கள்? எத்தனை நிறுவனங்கள் மூடப்பட்டன? இன்னும்கூட குருவி சேமித்தது போல சேமித்த பணத்தை மாற்ற முடியாமல் எத்தனையோ முதியோர் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனரே! இப்போது அடுத்த ஒரு வணிகத் திட்டத்திற்கு வித்திட்டிருக்கிறது நடுவண் பாஜக அரசு. என்ன ஒரேயொரு வேறுபாடு. பணமதிப்பிழப்பை இரவோடு இரவாக முன்னெடுத்தது. இந்த முயற்சியை முன்னதாகத் தெரிவித்திருக்கிறது. அது, இந்தியா முழுவதும் மின்சாரத்திற்கு ‘முன்னதாக கட்டணம் வாங்கும் முறை’யை அமல்படுத்த 1.5 லட்சம் கோடி ரூபாயில் மாபெரும் திட்டமாம். ‘முன்னதாக கட்டணம் வாங்கும் முறை’ என்னும் திட்டத்தைக் கொண்டு வர நடுவண் பாஜக அரசு முடிவு செய்துள்ளது. பணமதிப்பிழப்புக்கு போலவே இதற்கும் ஒரு சப்பைக் காரணத்தை தெரிவிக்கிறது. அந்தக் காரணம்: இந்தியா முழுவதும் திருடப்படும், வீண் செய்யப்படும் மின்சாரத்தைத் தடுக்க என்பதாகும். அண்மையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து வீடு மற்றும் கடைகளிலும் பழைய மின்சாரச் சக்கரம் சுழலும் மின்அளவியை மாற்றிவிட்டு புதிய எண்ணிம அளவி மாற்றப்பட்டது. இப்போதும் சில கிராமங்களில் இந்தப் பணி மேற்கொண்டு நடந்து வருகிறது. எண்ணிம அளவி மாற்றும் திட்டமே முழுமையாக முடிக்கப்படாத நிலையில் தற்போது ‘மிடுக்கு மின் அளவியை’ (ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர்) கொண்டு வர நடுவண் பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. அதுவும் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தவுள்ள மிகப்பெரிய திட்டமாம். நாடு முழுவதும் மிடுக்குமின்அளவி கொண்டு வருவதன் மூலம் மின்சாரத்திற்குச் செலுத்தப்படும் கட்டணம், வசூல் ஆகியவை சீராகும். இதன் மூலம் மின்சார விநியோக நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் பெரும் நட்டத்தை சரி செய்ய முடியும். இந்த மின்சார விநியோக நிறுவனங்கள் பெரும்பாலும் மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் காரணத்தால் மாநில அரசுகளின் வருமானம் உயரும். இந்த மிடுக்குமின்அளவி மூலம் தவறான கட்டண பதிவு, மின்சாரத் திருட்டு, காலம் கடத்தி செலுத்தப்படும் மின்சாரக் கட்டணம் ஆகிய சிக்கல்களையும் சரி செய்ய முடியும். என்று சப்பையான காரணங்களை அடுக்குகிறது நடுவண் பாஜக அரசு. இதை நிறுவும் செலவுகள், அதற்கான ஊழியர்களும் இதர தேவைகளும், அதனை ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் இணைக்கும் பணிகள் ஆகிய அனைத்திற்கும் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி தேவைப்படும் என மின்சாரத் துறை செயலாளர் சஞ்சீவ் நந்தன் சகாய்த் தெரிவித்துள்ளார். சரக்குசேவைவரி மாதிரி மின்கட்டணம் நடுவண் அரசுக்கு கொண்டு செல்லப்பட்டு- மாநிலஅரசுகள் பணிந்து மண்டியிட்டு தனது மாநிலத்திற்கான தொகையை கெஞ்சிப் பெற வேண்டியிருக்கும்! மக்களுக்கும், மாநிலங்களின் அதிகாரத்திற்கும் அடுத்த ஆப்பை வடிமமைக்கத் தொடங்கி விட்டது நடுவண் பாஜக அரசு. அதை எதிர்த்துப் போராடினால் பாஜக ஆதரவுக் குழுவின் வன்முறைக்கும், துப்பாக்கிச் சூட்டிற்கும் இரையாகத் தயாராக வேண்டியிருக்கும். பலியாவோம்!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



