Show all

இந்தியாவிற்கு நேர்ந்த கொடுமை- பொதுவானவர்கள் வருந்துகின்றனர்! கலவரத்தின் போது சும்மா இருந்துவிட்டு நெருக்கடியில் ஆதாரம் தேடும் டெல்லி காவல்துறை

டெல்லி கலவரத்தை நேரில் பார்த்தவர்கள், குறிப்பாகச் செய்தியாளர்கள் அல்லது கலவரம் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள், கலவரம் தொடர்பாக காணொளிகள், புகைப்படங்கள் வைத்திருக்கிறீர்கள் என்றால் அதை வடகிழக்கு டெல்லியில் உள்ள காவல்துறை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தவும். டெல்லி காவல்துறையின் அறிக்கை.

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் ஏதாவது ஒரு குக்கிராமத்தில் ஏதோ ஒரு மூலையில், ஒரு பிழையான நிகழ்வு முன்னெடுக்கப்படுமேயானல் முதலில் அந்தத் தகவல் காவல்துறைக்குத்தான் சென்று சேரும். அடிதடி போட்டுக் கொண்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு சென்றாலும் காவல்துறைக்கே முதலில் செய்தி அறிவிப்பார்கள். மாலை நேரங்களில் நாளேட்டுச் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க காவல் நிலையங்களை நாடுவது மரபு. ஆக நாட்டில் குற்றஞ் சார்ந்த எந்தச் செய்தியும் காவல்துறைக்கு அத்துபடி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற தகவல் ஆகும்.

டெல்லியில் அமைதியாக நடத்தப்பட்ட குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில்- பாஜக ஆதரவாளர்கள் உள்நுழைந்து முன்னெடுத்த வன்முறைக் கலவரத்தில் சிக்கி இதுவரை 43பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நிலையில், இந்த கலவர முன்னெடுப்புக்கு முதன்மைக் காரணமாக கபில் மிஸ்ரா கீச்சு குறிப்பிடப்பட்டு உளவுத்துறை எச்சரித்தும் டெல்லி காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமலிருந்தது தற்போது கேள்விக்குள்ளாக்கப் பட்டு வருகிறது.

டெல்லியில் அமெரிக்க அதிபர் தங்கியிருந்தபோது 15 கிமீ தொலைவில் நிகழ்த்தப்பட்ட மதக் கலவரம் உலக கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது. இந்த சூழலில் கலவரம் நடந்த வேளையில் டெல்லி காவல்துறை என்ன செய்தது என்ற கேள்விதான் நம் அனைவர் நடுவேயும் எழுகிறது.

டெல்லி உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் முரளிதர் விசாரணையில் கொடுத்த உத்தரவில் டெல்லி காவல்துறை அரண்டுபோய் இப்போது நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அறங்கூற்றுவர் ஒரே இரவில் பணியிடமாற்றம் செய்யப்பட்ட போதும், அவர் போட்ட உத்தரவு செயலாக்கம் பெற்று வருகிறது.

கலவரத்தில் ஈடுபட்டதாக டெல்லி காவல்துறை தற்போது 48பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும்516 பேர் கைது செய்யப்பட்டு கலவரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 

கலவரம் நடந்த போது கையைப்பிசைந்து கொண்டிருந்த டெல்லி காவல்துறை அறங்கூற்று மன்ற உத்தரவுக்குப் பிறகு ஆதாரங்ளைத் தேடி அலைகிறது. கலவரம் குறித்து தகவல் அறிய டெல்லி காவல்துறை ஊடகங்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் உதவி கேட்டுள்ளது.

டெல்லி காவல்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வன்முறை மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. இந்தக் கலவரத்தை நேரில் பார்த்தவர்கள், குறிப்பாகச் செய்தியாளர்கள் அல்லது கலவரம் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள், கலவரம் தொடர்பாக காணொளிகள், புகைப்படங்கள் வைத்திருக்கிறீர்கள் என்றால் அதை வடகிழக்கு டெல்லியில் உள்ள காவல்துறை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தவும். மேலும் தொடர்புக்கு 875081221, 8750871221 தொலைப்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும். சாட்சிகள் கமுக்கமாக வைக்கப்படுவார்கள் என்பதை இந்த இடத்தில் உறுதியளிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனிடையே, இன்று காலை முதல் 10 மணி நேரம் 144 தடை உத்தரவை தளர்த்திக் கொள்வதாக அரசு அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.