உண்மையில் ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவைக் குணப்படுத்துவதில் பலனளிக்கிறதா என்ற கேள்விக்கு இப்போதுவரை தெளிவான பதில்கள் இல்லை. உலக நலங்கு அமைப்பு கடந்த ஆண்டு நவம்பரில் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் இந்த மருந்தால் இறப்பு குறைவதோ, மூச்சுக்கருவியின் (வெண்டிலேட்டர்) தேவை குறைவதோ இல்லை என ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாகக் கூறியது. விரைவில் உடல்நலம் தேறுவதில்கூட இந்த மருந்துக்கு பங்கில்லை என்றும் தெரிவித்தது. 03,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் என்ற குறுவி (வைரஸ்) எதிர்ப்பு மருந்துக்கான தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இந்த மருந்தை அரசு விற்பனை செய்து வந்தாலும் இந்த மருந்தை வாங்க பெரும் போட்டி நிலவுகிறது. உண்மையில் இந்த மருந்து எந்த அளவுக்கு நோயைக் குணப்படுத்துவதில் உதவுகிறது என்பது குறித்து கேள்வி எழாமலே. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தொடக்க நிலை நோயாளிகளுக்குப் பலனளிப்பதாகக் கருதப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, தமிழ்நாடு அரசே கடந்த மாத இறுதியில் இதன் விற்பனையைச் சென்னையில் தொடங்கியது. முதலில் சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் மட்டும் விற்கப்பட்டுவந்த இந்த மருந்து தற்போது சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விற்கப்படுகிறது. இந்த மருந்து மிகக் குறைந்த அளவே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படுவதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் குறைந்த அளவே விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஒவ்வொரு நாளும் இந்த மருந்தைப் பெறுவதற்கான கூட்டம் அதிகரித்து வருகிறது. பலர் இந்த மருந்தைப் பெறுவதற்காக இரவு - பகல் பாராமல் வரிசையில் நின்று வருகின்றனர். உண்மையில் ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவைக் குணப்படுத்துவதில் பலனளிக்கிறதா என்ற கேள்விக்கு இப்போதுவரை தெளிவான பதில்கள் இல்லை. உலக நலங்கு அமைப்பு கடந்த ஆண்டு நவம்பரில் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் இந்த மருந்தால் இறப்பு குறைவதோ, மூச்சுக்கருவியின் (வெண்டிலேட்டர்) தேவை குறைவதோ இல்லை என ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாகக் கூறியது. விரைவில் உடல்நலம் தேறுவதில்கூட இந்த மருந்துக்கு பங்கில்லை என்றும் தெரிவித்தது. கொரோனாவின் தொடக்க காலத்தில் ரெம்டெசிவிர், லோபினவிர், ஹைட்ராக்ஸிக்ளோரோக்யின் ஆகிய குறுவி (வைரஸ்) எதிர்ப்பு மருந்துகள் சோதிக்கப்பட்டன. இந்த மருந்துகளை அளிப்பதால் இறப்பு குறைகிறதா, மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் குறைகிறதா, கோவிட் தாக்கி நிமோனியா வந்தவர்களுக்கு மூச்சுக்கருவி பொருத்தும் நிலையை தடுக்கிறதா என்பதை அறிய இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஹைட்ராக்ஸிக்ளோரோகுயினால் இறப்பு அதிகரிப்பதாகக் கருதப்பட்டு சோதனையிலிருந்து நீக்கப்பட்டது. பிறகு மறுபடியும் சேர்க்கப்பட்டது. முடிவில் அந்த மருந்தால் எந்த பலனும் இல்லையெனத் தீர்மானிக்கப்பட்டது. கடந்த ஆண்டின் இடைக்கால சோதனை அறிக்கையில் இந்த மூன்று மருந்துகளாலும் பெரிதாக எந்தப் பலனும் இல்லை எனக் கூறப்பட்டது. இருந்தபோதும், இந்த மருந்து தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு அண்மையில் கொரோனா நோயாளிகளுக்கான மருந்து மற்றும் சிகிச்சைக்கான நெறிமுறைகளை வெளியிட்டபோது, அதில் இந்த மருந்து இடம்பெறவில்லை. இருந்தபோதும், இந்த மருந்திற்கான தட்டுப்பாடு குறையவில்லை. ‘உலகம் முழுவதும் ரெம்டெசிவிர் கொரோனாவுக்குப் பலனளிக்கிறதா என்பது குறித்து செய்யப்பட்ட சோதனைகளில் சாதகமான முடிவுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த மருந்தைக் கொடுப்பதால் இறப்பு குறையவில்லை. குணமடையும் விகிதம் மாறவில்லை. ஆகவே, அரசு மருத்துவமனைகளில் இந்த மருந்து கொடுக்கப்படுவதில்லை. ஆனால், தனியார் மருத்துமனைகள் இப்போதும் இந்த மருந்தை பரிந்துரைக்கின்றன.’ என்கிறார் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் மருந்தியல் துறை பேராசிரியர் பரந்தாமன். தொடக்க கட்டத்தில் இந்த மருந்தைக் கொடுத்தால், மிகச் சிறிய அளவில் பலன் இருக்கும். மருத்துவமனையில் இருக்கும் நாட்களை இது குறைக்கும். ஆனால், தீவிர நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்தை கொடுப்பதாலோ, கொடுக்காமல் இருப்பதாலோ எவ்வித மாற்றமும் இருக்காது என்கிறார் அவர். ‘அதாவது ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் கடந்துவிட்ட நிலையில், பத்து நாட்களுக்குள் இந்த மருந்தைக் கொடுத்தால் அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் நாட்கள் சிறிது குறையும். ஆனால், நோயின் தொடக்க நிலையிலோ, தீவிர நிலையிலோ இந்த மருந்தைக் கொடுத்தால் எந்த பலனும் இருக்காது. இது உயிர் காக்கும் மருந்து அல்ல’ என்கிறார் பரந்தாமன். இந்தக் கருத்தையே எதிரொலிக்கிறார் தமிழ்நாடு பொது நலங்குத் துறையின் முன்னாள் இயக்குனர் குழந்தைச்சாமி. ‘கொரோனா தொற்றைப் பொறுத்தவரை, உயிர் காக்கும் மருந்துகள் என்றால் ஸ்டீராய்டுகளும் லோ மாலிக்யுலர் ஹோப்பரின் மருந்துகளும்தான். ரெம்டிசிவரைப் பொறுத்தவரை, அது உயிர் காக்கும் மருந்து அல்ல’ என்கிறார் குழந்தைச்சாமி. இந்த மருந்து தற்போது அரசு மருத்துவமனைகளில் மட்டும் மிகக் குறைந்த அளவில் கிடைப்பதால்தான் இதற்கு இவ்வளவு பெரிய தேவை இருக்கிறது. இந்தத் தருணத்தில் இந்த மருந்தால் பலனில்லை என்று சொன்னால் மக்கள் ஏற்க மாட்டார்கள். மருந்துக்குத் தட்டுப்பாடு இருப்பதால் இப்படிச் சொல்வதாக நினைப்பார்கள் என்கிறார் குழந்தைச்சாமி. தவிர, இந்த மருந்துக்கு தீவிரமான பக்க விளைவுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் பரந்தாமன். இந்த மருந்தால் சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, இதய துடிப்பு குறைவது ஆகியவையும் ஏற்படலாம். ‘ஏற்கனவே மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இதயத் துடிப்பும் குறையுமானால், அவர் அபாயநிலையை அடையலாம்’ என்கிறார் பரந்தாமன். பெரிய பலனில்லாத, பக்கவிளைவுகள் நிறைந்த இந்த மருந்தை பயன்படுத்தக்கூடாது என அரசு சொல்ல முடியாதா என்ற கேள்விக்கு, ‘சொல்ல முடியாது. மிதமான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு சிறிதளவு பலனளிக்கும் நிலையில், அந்த மருந்து கொடுப்பதை ஏன் தடைசெய்கிறீர்கள் என்று கேட்பார்கள். ஆகவே சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்தான் இதைப் பரிந்துரைப்பதில் கவனமாக இருக்க வேண்டும்’ என்கிறார் மருத்துவர் பரந்தாமன். ரெம்டெசிவிர் மருந்து தொடக்கத்தில் மஞ்சள் காமலை குறுவி (ஹெப்படிட்டிஸ்-சி வைரஸ்) தாக்குதலை குணப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு எபோலா குறுவி (வைரஸ்) தாக்கியபோது இந்த மருந்து அளிக்கப்பட்டது. பிறகு கோவிட் - 19 நோய் தாக்குதல் பெருந்தொற்றாக உருவெடுத்ததையடுத்து, இந்த மருந்து பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.