புதிய கல்வி கொள்கையை மாநிலங்கள் மீது அதிகாரப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். 03,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய பாஜக அரசின் ஹிந்தி சமஸ்கிருதத் திணிப்புக்கான புதிய கல்விக் கொள்கையை அதிகாரப்படுத்துவது தொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் இன்று காணொளியில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கல்வி அமைச்சர்களுடனும் ஒன்றிய அரசு கலந்து ஆலோசனை நடத்த வேண்டும் என தமிழக அரசு சார்பில் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒன்றிய அரசுக்கு மடல் எழுதியிருந்தார். இதற்கு இன்றுவரை ஒன்றிய அரசிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இதனையடுத்து புதிய கல்வி கொள்கையை மாநிலங்கள் மீது அதிகாரப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைக்க முடியாது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் கூறியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவதை விட கல்வித்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துங்கள் என்று ஒன்றிய அரசுக்கு மடல் எழுதினோம். அந்தக் மடலுக்கு பதில் ஏதும் வரவில்லை. எனவே அவர்கள் நடத்தும் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை. கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம், ஹிந்தி என திணிப்பு நடப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.