அமெரிக்கா, பிரிட்டனை மிஞ்சி உலகின் எண்ணிமத் திறன் மிக்க நாடாக இந்தியா திகழ்வதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் பணிபுரியும் 67 விழுக்காடு எண்ணிமப் பணியாளர்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பமான இணைய வழி கற்றல், செயற்கை நுண்ணறிவு, இணைய கருத்துருக்கள் போன்றவை பணியில் செயல்திறனை அதிகரிக்க உதவுவதாக கார்ட்னர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர். தி கார்ட்னர் எண்ணிமப் பணியிட கருத்துக்கணிப்பில், அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள், பணியிடத்தில் எண்ணிமத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய திறனை கற்று கொள்ளும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பதால் உலகின் எண்ணிமத் திறனுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது. அதை தொடர்ந்து பிரிட்டன், அமெரிக்கா நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் உள்ள 27 விழுக்காட்டு எண்ணிமப் பணியாளர்கள், வேலை சார்ந்த எண்ணிமத் தொழில்நுட்பத்தில் திறமையான நிபுணர்களாக இருப்பதாகவும், இந்தியாவில் உள்ள 10ல் 7 பணியாளர்கள், புதிய எண்ணிமத் தொழில்நுட்பங்களைக் கற்றுகொள்வது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, அதிக சம்பளம் பெறுவதற்கு உதவுவதாக கூறுவதாக கார்ட்னர் அமைப்பின் முதன்மை ஆய்வாளரான ராஷ்மி சவுத்ரி தெரிவித்துள்ளார். நிகழ்கால ஒத்துழைப்புக்காக பணியாளர்கள் பயன்படுத்தும் கருவி அடிப்படையில், சிங்கப்பூர், இந்தியாவில் உள்ள எண்ணிமப் பணியாளர்கள், சமூகவலைதளங்கள் மூலம் செய்தி அனுப்புவதில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பணியாளர்களை விட அடிக்கடி பயன்படுத்துகின்றனர். எண்ணிமக் கருவிகள் பணியாளர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துதல், இடைமறித்தல் போன்றவை மூலம் பணியாளர்கள் தொழில்நுட்ப திறனை அதிகரிக்க உதவுகிறது எனவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் எண்ணிமப் பணியாளர்கள், ஒரு அறிவுப்பாடான பணியிடம் பொருளுள்ள, வணிக அடிப்படையான பணிகளில் அதிக கவனம் செலுத்துவதற்குப் பங்களிக்கிறது என்று நம்புகிறார்கள். இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் எண்ணிமப் பணியாளர்கள் தங்களுக்கு, வழக்கமான பயிற்சி அளிக்கும் வகுப்பறை மற்றும் பயிற்சி பட்டறையை விரும்பவில்லை. பணியில் இருந்து கொண்ட கற்றுக்கொள்ளும், குறைந்த நேரத்தில் கற்றுகொள்ளும் பயிற்சிகள் மூலம் பணித் திறனை மேம்படுத்தி கொள்ள தயாராக உள்ளனர். இந்தியாவில், எண்ணிமப் பணியாளர்களில் 39 விழுக்காட்டு பேர்கள் செயற்கை நுண்ணறிவு, இணையவழி கற்றல் குறித்த அறிவை புதுப்பிக்க வைத்திருக்க பணியில் இருந்தபடியான பயிற்சி பெற விரும்புகிறார்கள். இது கருத்துக் கணிப்பில் பதிலளித்த எண்ணிக்கையில் மிக உயர்ந்தது என்று கார்ட்னர் தெரிவித்துள்ளது. பெருமையான செய்திதான், ஆனாலும் தமிழகத்தில் கொரோனா நிவரணம் ரூ1000 வாங்க, மக்கள் குடும்பஅட்டைப் பொருள் கடைகளில்தாம் நிற்;கனுமா? இயங்கலை வழியாக அவர்கள் வங்கி கணக்கிற்கே அனுப்ப முடியாதா என்ற ஒரு கேள்வி எழும். வங்கிக் கணக்கிற்கு 15இலட்சம் அனுப்புவதாக சொன்ன நடுவண் பாஜக அரசை நம்பி, மக்கள் அன்றாடம் வங்கிக் கணக்கை பரிசோதித்து வரும் நிலையில், இந்த ஆயிரம் வங்கி வழியாகப் போனால், நடுவண் அரசு கொடுத்து விட்டது என்று மக்கள் மயங்கி விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசும் மக்களும் இந்த ஆயிரத்தை கொடுக்கவும், வாங்கவும் இவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது. பாஜகவின் தில்லாலங்கடிகளுக்கு முடிவு வந்தால்தாம் எண்ணிமப்பாடு நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் சென்றடைய முடியும். அதுவரை இந்திய எண்ணிமம் கருத்துக்கணிப்புகளில்; மட்டுமே வாழும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



