கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை அறிவதற்கான அதிவிரைவு அடையாளங்காட்டிகள் (கருவிகள் அல்ல) 24,000 எண்ணிக்கைகள் சீனாவிலிருந்து சென்னை வந்தடைந்துள்ளன. 04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்றைக் கண்டறிய உதவும் ஐந்து இலட்சம், கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளை (ரேபிட் டெஸ்ட் கிட்) சீனாவிலிருந்து தமிழக அரசு கேட்பு வழங்கியிருந்தது. அதில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை அறிவதற்கான அதிவிரைவு அடையாளங்காட்டிகள் (கருவிகள் அல்ல) 24,000 எண்ணிக்கைகள் சீனாவிலிருந்து சென்னை வந்தடைந்தன. முதற்கட்டமாக 24,000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் சென்னை வந்தடைந்துள்ள நிலையில், அவற்றை நலங்குத் துறையின் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,387 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளதாகவும் நடுவண் அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்று புதிதாக 1,007 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் 23 பேர் உயிரிழந்திருப்பதாகவும் நடுவண் நலங்குத் துறை தெரிவித்திருக்கிறது. இதுவரை கொரோனாவை பரிசோதிக்க பலஇலட்சம் மதிப்பிலான (குறைவான) கருவிகள் பயன்பாட்டில் இருப்பதாலேயே கொரோனாவை விரைவாக அறிய முடியாமலும் விரைவாக சிகிச்சையும் முன்னெடுக்கப்பட முடியாமல் தாமதப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகம் மட்டும் முன்பே சீனாவிடம் கேட்பு வழங்கியிருந்த, ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத் தக்கதான கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகும், நீண்ட காலத்திற்குப் பிறகும் முதற்கட்டமாக 24,000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் மட்டுமே வந்து சேர்ந்திருக்கின்றன. கொரோனா தொற்றை விரைவாக கண்டுபிடிக்க உதவும் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளைத் தயாரிக்க தற்போது மூன்று இந்திய நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. டில்லியில் உள்ள வான்காரட் டயாக்னாஸ்டிக்ஸ் என்ற நிறுவனமும், கேரளாவிலுள்ள இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் லேட்டக்ஸ் நிறுவனமும் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள்; உற்பத்தியை தொடங்கி உள்ளன. கேரளாவின் இந்துஸ்தான் லேட்டக்ஸ் நிறுவனம் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் ஒரு லட்சம் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வான்கார்டு இன்னும் 3 கிழமைகளில் அவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளது. இவை தவிர வாக்ஸ்டர் பயோ லிமிடெட் நிறுவனமும் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் உற்பத்தியை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



