மிகச்சில நாட்களில் தமிழகத்தில் கொரோனா சுழியம் நிலையை எட்டும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். மேலும் கொரோனாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லாம் அடையாளம் காணப்பட்டு விட்டார்கள். கொரோனா புதிய நோயாளிகள் இனி இல்லை என்பதை மிகச் சில நாட்களில் எட்டுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் முதல்வர். 04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: அடுத்த சில நாட்களுக்குள், தமிழகத்தில் புதிதாக கொரோனா நோயாளிகள் இல்லாத நிலை உருவாகும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்தார். நடுவண் அரசு சிவப்பு மண்டலம், பச்சை மண்டலம், வெள்ளை மண்டலம் என்ற மாவட்டங்களை அறிவித்துள்ளது. பச்சை மண்டலம் என்றால் அந்த மாவட்டத்தில் ஒரு கொரோனா பாதிப்பும் கூட இல்லை என்று பொருள். சிவப்பு மண்டலப் பகுதியில் தற்போது உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். கொரோனா பரவலில் தமிழகம் இரண்டாவது நிலையில்தான் உள்ளது. தற்போது நோயின் தாக்கம் குறைந்துள்ளது. இன்னும், இரண்டு, மூன்று நாட்களில் படிப்படியாக குறைந்துவிடும். ஏற்கனவே நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இந்தப் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா பரவல் தடுக்கப்பட்டு, நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள், புதிய நோயாளிகள் எண்ணிக்கை சுழியம் என்ற அளவுக்கு குறைந்து விடும், என்று எண்ணுகிறோம். இதுவரை 150 பேர்கள் கொரோனாவிலிருந்து குணம் ஆகியுள்ளனர். எனவே, அனைத்து நோயாளிகளையும் குணப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அனைவரும் குணமாகி விடுவார்கள். அதை நாம் பார்த்து மகிழப்போகிறோம். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சென்னையில், தலைமைச் செயலகத்தில் நேற்று மாவட்டங்களில் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் (கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்) காணொளிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாவட்ட வாரியாக செய்து வரும் பணிகள், எடுக்கப்பட வேண்டிய பணிகள், குறித்தும் கொரோனாஆட்சிமை பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



