Show all

டெல்டா வகை தொற்று!

கொரோனா பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைக்கு, தற்போது பரவிவரும் டெல்டா வகை குறுவி (வைரஸ்) பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக இந்தியா உள்ளிட்ட டெல்டா வகை குறுவி பரவல் உள்ள நாட்டு இயல்அறிவர்கள் அரசுகளை எச்சரித்து அச்சம் தெரிவிக்கின்றனர்.

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: அமெரிக்காவில், கொரோனா தொற்று பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைக்கு, அதிக வீரியம் உடைய உருமாறிய, டெல்டா வகை தொற்று, மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என, வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலேசாகர் டாக்டர் ஆன்டனி பாஸி கவலை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கடந்த ஆண்டு டிசம்பரில், கொரோனா இரண்டாவது அலை உருவானது அப்போது, அதிக வீரியம் உடைய, உருமாறிய, ஆல்பா வகை குறுவி (வைரஸ்) கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்திய பின், பிரிட்டனில் தொற்று பரவல் மெல்ல குறைந்தது. இதையடுத்து, தளர்வுகளை முழுவதுமாக விலக்கிக் கொள்ள பிரிட்டன் அரசு முடிவு செய்தது. இந்நேரத்தில், டெல்டா வகை குறுவி பரவலால், பிரிட்டனில் மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கியது. தற்போது தொற்றுக்கு ஆளாகும், 90 விழுக்காட்டு பேர்கள் டெல்டா வகை தொற்றினாலேயே பாதிக்கப்படுவதாக, அந்நாட்டு நலங்குத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்தான் அமெரிக்காவிலும் டெல்டா வகை குறுவிப் பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் ஆன்டனி பாஸி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் முதன்முதலில் கண்டறிப்பட்ட டெல்டா வகை தொற்று, தற்போது அமெரிக்காவிலும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. புதிதாக பாதிக்கப்படுபவர்களில், 20 விழுக்காட்டு பேர்களுக்கு இந்த வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைக்கு, இந்த டெல்டா வகை குறுவி (வைரஸ்) பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

இதுவரை உருமாறிய குறுவி வகைகளிலேயே, இந்த டெல்டா வகை அதிக வீரியம் உடையதாகவும், வேகமாக பரவும் தன்மையுடனும் உள்ளது. பாதிப்பு ஏற்படுபவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு, தொற்று தீவிரம் உள்ளது. அமெரிக்காவில், இரண்டே கிழமையில் தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ளது. இந்த உருமாறிய புதிய வகை தொற்றை எதிர்த்து, அமெரிக்க தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவது சற்று ஆறுதலான தகவல். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்திய 2ம் அலை குறுவியின் உருமாறிய வடிவமாக டெல்டா குறுவி உள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து பேசிய இயல்அறிவு மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் இயலர் வினோத் ஸ்காரியா, சார்ஸ் கோவிட் 2வின் ஸ்பைக் புரதத்தில் பிறழ்வை சந்தித்து உருமாறியிருப்பதாகவும், இந்த உருமாறிய குறுவி ஐரோப்பாக்களில் மூன்று மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கடந்த மாதம் அதிகாரப்பாடாக மக்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்டா குறுவி குறித்து விளக்கம் அளித்துள்ள ஒன்றிய அரசு, இதற்கு முந்தைய குறுவிகளை விட வேகமாக ஒருவரை தொற்றகூடிய அபாயம் டெல்டா குறுவியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. நேரடியாக நுரையீரல் செல்களை பாதித்து, மோனோகுளோனல் எதிர்மெய் செயலாக்கத்தை வேகமாக குறைப்பதாக விளக்கியுள்ளது. தற்போதைய சூழலில் டெல்டா குறுவி பரவல் கண்டுபிடிக்கப்பட்ட 9வது நாடு இந்தியா ஆகும். ஏற்கனவே, அமெரிக்கா, இங்கிலாந்து, போர்சுக்கல், சுவிஸ்சர்லாந்து, ஜப்பான், போலந்து, நேபாள், சீனா மற்றும் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் டெல்டா பிளஸ் வகைக் குறுவி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் மற்றும் எடுத்துக்கொள்ளாதவர்களிடம் இது ஏற்படுத்தப்போகும் பாதிப்பு என்ன என்பது மர்மமாகவே இருக்கிறது. இருப்பினும் நாட்டின் முன்னணி குறுவியியல் பேராசிரியர் சாகித் ஜமீல் பேசும்போது, டெல்டா பிளஸ் வகை வேகமாக பரவும் என்பதற்கான உறுதியான சான்றுகள் தற்போது வரை இல்லை எனக் கூறியுள்ளார்.

மிதமான அல்லது தீவிர கோவிட் தொற்று உள்ளவர்களுக்கு மோனோகுளோனல் சிகிச்சை அளிக்கப்படுபடுகிறது. மேலும், தீவிர தொற்றுக்குள்ளாக வாய்ப்புள்ளவர்களுக்கும் இந்த சிகிச்சை முன்கூட்டியே பரிந்துரைக்கப்படுகிறது. மோனோகுளோனல் எதிர்மெய் என்பவை ஒரு குறிப்பிட்ட எதிர்ப்பியை இலக்கு வைக்கும். சார்ஸ் கோவிட் 2 குறுவியின் ஸ்பைக் புரதங்களுடன் சேர்த்து ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்படும் மோனோகுளோனல்கள், நலமான செல்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைவதை தடுக்கும். ஆனால், டெல்டா பிளஸ் வகை குறுவி பாதிக்கப்பட்டவர்களுக்கு, கோவிட் குறுவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் மோனோகுளோனல் சிகச்சை பலனளிக்கவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சிகிச்சையை டெல்டா பிளஸ் குறுவி முற்றிலும் நிராகரிப்பதாகவும் கூறியுள்ளனர்.

கொரோனா குறுவியின் முதல் அலை நிறைவடைந்தவுடன், பாதிப்பில் இருந்து மீண்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருந்தபோது உருமாறிய சார்ஸ் கோவிட் 2 குறுவி இந்தியா முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. ஒன்பது மாதங்களுக்கு முன்பு தொடங்கிய 2வது அலை உருமாறிய குறுவிப் பரவல் மீது தொடக்கத்தில் முழு கவனம் செலுத்தாததால் 2வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் உயிரிழப்புகள் மிகுந்திருந்தன.

புதைக்க இடம் இல்லாமல் எரிவாயு மேடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தங்களின் குடும்ப உறுப்பினர்களின் உடலை ஆறுகளில் தூக்கியெறிந்தனர். கிடைக்கும் இடங்களில் புதைத்தனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிந்ததால் படுக்கைகள் இல்லாமல் சாலைகளிலும், சடுதிவண்டிகளிலும் பல மணி நேரம் காத்திருந்தனர். இதற்கு முதன்மைக் காரணம் ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு இந்தப்பாடுகளில் உதவாத பொறுப்பற்ற அரசாக இருந்ததே என நிபுணர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது டெல்டா குறுவிப் பரவலானது மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பேசும் நிபுணர்கள், டெல்டா பிளஸ் வகை 3வது அலையாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளனர். அந்த மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் எளிதாக கடந்து செல்லாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கடந்த அலையின்போது கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட மகராஷ்டிரா மாநிலத்தில் தற்போது டெல்டா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் சேர்த்து இதுவரை 22 பேர் டெல்டா பிளஸ் குறுவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.