ஜம்மு காஷ்மீரின் 14 முதன்மைத் தலைவர்களோடு மூன்று மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தியிருக்கின்றனர் தலைமைஅமைச்சர் மோடி உள்ளிட்ட ஒன்றிய ஆட்சியில் உள்ள பாஜகவினர். இது ஒன்றிய பாஜக அரசு பிடுங்கிய சிறப்புத் தகுதியை ஜம்மு காஷ்மீருக்கு திரும்பக் கொடுக்கும் வகைக்கானது என்று தெரியவருகிறது. 11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஜம்மு காஷ்மீரின் 14 முதன்மைத் தலைவர்களோடு மூன்று மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தியிருக்கின்றனர் தலைமைஅமைச்சர் மோடி உள்ளிட்ட ஒன்றிய ஆட்சியில் உள்ள பாஜகவினர். மூன்று மாநிலத் தேர்தல்களில் மக்கள் பாஜகவை விரட்டியடித்ததைத் தொடர்ந்து, பாஜக முன்னெடுக்கும் இரண்டாவது மறுபரிசீலனை இதுவாகும். ஒன்றிய ஆட்சியில், பாஜக பதவியேற்றதில் இருந்து மக்கள் விரோதப் போக்கில் கொஞ்சமும் அதன் பிடி தளர்ந்தது இல்லை. ஆனால் மூன்று மாநிலத் தேர்தல்களில், மக்கள் பாஜகவை விரட்டியடித்ததைத் தொடர்ந்து, பாஜக இரண்டாவது முறையாக மக்கள் விரோதப் போக்கில் இருந்து தனது பிடியைத் தளர்த்தியிருக்கிறது. முதல் முறைத்தளர்வு கொரோனா ஒழிப்பிற்கு ஒன்றிய அரசு இலவச தடுப்பூசி வழங்க ஒப்புக் கொண்டது. தற்போது ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு, காஷ்மீரின் சிறப்புத் தகுதியை நீக்கிய ஒன்றிய அரசில் இருக்கும் பாஜக, தற்போது அந்தச் சிறப்புத் தகுதியை மீண்டும் வழங்கிட இறங்கி வந்திருக்கிறது. இதையடுத்து பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பட்டவர்களிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. ஜம்மு காஷ்மீரின் மாநிலத் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். கொரோனா நோய்த் தொற்று வருவதற்கு முன்பாகவே அங்கு ஊரடங்கு என்ற நிலை வந்தது. இணைய வசதி அங்கு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையை ஆண்டுக் கணக்கில் ஜம்மு காஷ்மீரில் பாஜக ஒன்றி அரசு முன்னெடுத்தது. ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவி வருவதாகத் தொடர்ந்து பா.ஜ.க தலைவர்கள் சொல்லி வருகின்றனர். ஆனால், படைத்துறையின் பிடியில் ஜம்மு காஷ்மீர் சிக்கித் தவிப்பதாகவும், கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டிருப்பதாகவும், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து செய்திகள் வருகின்றன. சிறப்புத் தகுதி நிக்கம் செய்யப்பட்டு 22 மாதங்கள் கடந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் 14 முதன்மை அரசியல் தலைவர்களோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கின்றனர் மோடி உள்ளிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள். இன்று ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவும் பங்கேற்றார். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, கம்யூனிஸ்ட் கட்சியின் முகமது யூசுப் தாரிகாமி, காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மூன்று மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை பணிகள் முடிந்தவுடனேயே ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படும். தொகுதி வரையறை பணிகள் விரைவாக முடிவடைய அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மோடியும் அமித்சாவும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் பலரும், முதலில் ஜம்மு காஷ்மீருக்கு மாநிலத்தின் சிறப்புத் தகுதியை திருப்பியளிக்க வேண்டும், அதன் பின்னர் தேர்தல் நடத்தலாம் என்ற கோரிக்கையை வலுவாக முன் வைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கு, மாநில அந்தஸ்து என்பது உரிய நேரத்தில் வழங்கப்படும் என்று மோடி பதிலளித்தாகத் தெரிகிறது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்று தலைமைஅமைச்சர் தெரிவித்திருப்பது பெரும்பாலான தலைவர்களுக்கு வருத்தத்தைத் தந்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் தற்போது தொகுதிகளின் எல்லைகளை மாற்றி அமைக்க வேண்டிய தேவையில்லை என்றார். மெகபூபா முப்தி, தேர்தல் நடத்துவதைவிட, முதலில் சிறப்புத்தகுதி மீட்டெடுப்பதுதான் கட்டாயம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. காங்கிரசின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், காஷ்மீர் பாட்டில் காங்கிரசும், ஜம்மு காஷ்மீரின் பிற கட்சிகளும் முதலில் பிடுங்கப்பட்ட சிறப்புதகுதி வழங்கப்படுவதைத்தான் விரும்புகின்றன. அதன் பிறகு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன. ஆனால், முதலில் தேர்தல், பின்னரே சிறப்புத்தகுதி என்பதில் ஒன்றிஅரசில் அமைந்த பாஜக உறுதியாக இருக்கிறது என்று கீச்சுவில் பதிவிட்டிருக்கிறார். மேலும்- ‘குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும். அதேபோல மாநிலங்கள்தான் தேர்தல்களை நடத்த வேண்டும். அத்தகைய தேர்தல்தான் சுதந்திரமானதாகவும், நியாயமானதாகவும் இருக்கும். ஒன்றிய அரசு ஏன் முன்னால் வண்டியையும், பின்னால் குதிரையையும் கட்டி இழுக்க நினைக்கிறது’ என்றும் பதிவிட்டிருக்கிறார். அங்கு தேர்தல் நடத்தி ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. தங்களுக்குச் சாதகமான கட்சிகளைக் கூட்டணியில் சேர்க்கும் பணியையும் பா.ஜ.க செய்து வருவதாகத் தெரிகிறது. தேர்தலுக்கு முன்பே பிடுங்கப்பட்ட சிறப்புத்தகுதியை வழங்கிவிட்டால், அதை வைத்துத் தேர்தல் கருத்துப்பரப்புதலிலோ, பேரத்திலோ ஈடுபட முடியாது என்பதனால்தான், தேர்தலுக்குப் பின்பு சிறப்புத்தகுதி என்கிறது பா.ஜ.க. அதுமட்டுமல்லாமல், மாநிலமாக இருந்தால், தேர்தல் நடைமுறையில் ஒன்றிய அரசின் தலையீடு இருக்காது. எனவேதான் முதலில் தேர்தல், பின்னர் சிறப்புத்தகுதி என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது என்று பேசப்படுகிறது.
20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5121 அன்று (05.08.2019) இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உறுதிப்படுத்தியிருந்த, ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு தகுதி வழங்கும் சட்டப் பிரிவுகளான 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை விலக்கியதோடு, ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீரை, லடாக், ஜம்மு காஷ்மீர் என இரண்டு ஒன்றியப் பகுதிகளாக அறிவித்தது பாஜக அரசு.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.