சீனாவில் கொரோனா நுண்ணுயிரி பாதிப்பால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டைசேர்ந்த பெரும் செல்வந்தரான குவோ வெங்கூய் தெரிவித்துள்ளார். 28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் கொரோனா நுண்ணுயிரித் தொற்று புயல் வேகத்தில் பரவி வருகிறது. நுண்ணுயிரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனாவின் பிற பகுதிகளை மட்டுமின்றி 28 நாடுகளுக்கும் வேகமாகப் பரவுகிறது. கொரோனா நுண்ணுயிரித் தொற்றால் தற்போது வரை, உயிரிழப்பு ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என உலக நலங்குத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும், சீனாவைச் சேர்ந்த பெரும் செல்வந்தரான குவோ வெங்கூய் கீச்சுவில் வெளியிட்டுள்ள பதிவில், உகான் நகருக்குள் யாரும் நுழைய முடியாத படி கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீன அரசு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை யாருக்கும் தெரியாமல் அங்கு எரித்து வருகிறது. அன்றாடம் 1,200 சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்பட்டிருக்கலாம். மேலும், 15 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சீன அரசு இவை அனைத்தையும் மறைத்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே சீன நலங்குத் துறை, 3.8 கோடி பேர் வசிக்கும் உகானில் 50 லட்சம் பேர் மாயமாகி உள்ளனர். அவர்கள் மூலமும் இந்த நுண்ணுயிரித் தொற்று பரவக் கூடும். அவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் எனத் தெரிவித்துள்ள நிலையில், குவோ வெங்கூய்யின் கருத்து உண்மையாக இருக்குமோ என்ற அச்சத்தை உருவாக்குவதாக இருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



