செய்தி தொகுப்பு வெளியிடும் வகையிலாக, கொரோனா தொற்று உலக அளவில் தனிச்செய்தியாக முன்னெடுக்கப்பட வேண்டிய சிறப்பு கவனம் பெறுகிறது. அந்த வகையில் கொரோனா தொற்றால் நலங்குத் துறை முதல் பொருளாதாரம்வரை ஏற்படும் பாதிப்புகள் பற்றிய செய்திகள் உலகெங்கிலுமிருந்து அணி அணியாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்று உலக அளவில் தனிச்செய்தியாக முன்னெடுக்கப்பட வேண்டிய சிறப்பு கவனம் பெறுகிறது. அந்த வகையில் கொரோனா தொற்றால் நலங்குத் துறை முதல் பொருளாதாரம்வரை ஏற்படும் பாதிப்புகள் பற்றிய செய்திகள் உலகெங்கிலுமிருந்து அணி அணியாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சில முதன்மையான செய்திகளைப் பட்டியல் இட முயல்வோம். அ. கேரளாவில் முதன்முதலில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நபர் கொரோனாவிலிருந்து முழுவதுமாகக் குணமாகிவிட்டார். ஆகவே இப்போதைக்கு இந்தியாவில் இன்னும் இருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்புள்ளது. ஆ. ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பாலகிருஷ்ணா. இவருக்கு, கடந்த சில தினங்களாகவே சிறுநீரகத் தொற்று பாதிப்பு இருந்துவந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இருமல், தும்மல் போன்ற சில சிக்கல்கள் இருந்து வந்த நிலையில், தனக்கு ஏற்பட்டுள்ளது கொரோனா தாக்கம்தான் என சுயமாக முடிவெடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட பயத்தின் நீட்சியாக, நேற்று, தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் அவர். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆந்திராவின் மருத்துவ அதிகாரிகள் தரப்பில் கொரோனா குறித்த விழிப்புணர்வுப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இ. கோவிட்- 19எனப் பெயரிடப்பட்டுள்ள கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று ஏற்பட்ட 108 உயிரிழப்புகளோடு சேர்த்து, கோவிட் - 19 கொரோனாவால் இதுவரை 1,116 உயிரிழந்துள்ளனர். 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கோவிட் - 19 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈ. சீனாவைச் சேர்ந்த டயமண்ட் ப்ரின்சஸ் க்ரூஸ் என்ற கப்பலில் பயணித்த 3000-க்கும் அதிகமான பயணிகளில், 174 பேருக்கு கொரோனா பாதிப்பிருப்பது சிலநாட்களுக்கு முன்பு உறுதிசெய்யப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக அந்தக் கப்பல் நடுக்கடலில் தனிமைப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 24 பேர் அமெரிக்கர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. உ. கப்பல் வழியாக வரும் பயணிகள் குறித்த அச்சத்தின் காரணமாக, 2,200 பயணிகளோடு பயணித்த வெஸ்டர்டேம் க்ரூஸ் என்ற கப்பல் வழியாகச் சீனாவிலிருந்து தாய்லாந்துக்குப் பயணிப்பவர்கள், தரையிறங்கத் தடை விதித்துள்ளது தாய்லாந்து அரசு. ஊ. உயிரிழப்பு ஆயிரத்தைத் கடந்த நிலையில், உலக நலங்குத்துறை நிறுவன அதிகாரிகள் சீனாவுக்கு வருகை தந்து, நோய் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எ. வியட்நாமில், மூன்று மாதமே ஆன குழந்தை ஒன்றுக்கு கொரோனா பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தக் குழந்தையின் பாட்டிக்கு கொரோனா பாதிப்பிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏ. பெரும்பாலும், குடும்பத்திற்குள்ளேயேதான் கொரோனா பாதிப்பு தீவிரமாகப் பரவுவதாக, சீன மருத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கெனவே கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள், கூடுதல் அக்கறையோடு இருக்கவும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஐ. கொரோனாவின் தாக்கம், உலகம் முழுக்க மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது என உலக நலங்குத்துறை நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டெட்ராஸ் குறிப்பிட்டுள்ளார். இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ள நோயாளிகளில், 99விழுக்காட்டு பேர்கள் சீனாவைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும், நோய்த்தாக்குதல் உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது குறித்து பேசியுள்ளார் அவர். ஒ. 150 லட்சம் மக்கள் வாழும் தென்கிழக்கு சீனாவின் டியான்ஜின் பகுதியில் சமீபத்தில் 102 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இவர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள், அங்கிருக்கும் ஒரு கடையோடு தொடர்புடையவராக இருந்துள்ளனர் எனத் தெரியவரவே, அந்தக் கடை இப்போது தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும், பாதிப்பு தொடங்கிய நாள் முதல் இன்றுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்தக் கடைக்கு வந்து சென்றுள்ளனர் என்றும், அவர்கள் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஓ. கடந்த கிழமை வூகானிலிருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்கர் ஒருவருக்கு, கொரோனா பாதிப்பிருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவரோடு சேர்த்து வெளியேற்றப்பட்ட 166 பயணிகளும், தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இவர், அமெரிக்காவின் 13வது கோவிட் - 19 கொரோனா நோயாளி. க. வூகானிலிலுள்ள தங்கள் நாட்டவர்களை மீட்பதற்காக, தென் கொரியாவிலிருந்து மூன்றாவது விமானம் நேற்று புறப்பட்டுள்ளது. ஏறத்தாழ 2,000 தென் கொரிய மக்கள் வூகானில் வாழ்ந்து வரும் நிலையில், முதல் இரு விமானம் மூலம் 700 பேர் மட்டுமே வெளியேற்றப்பட்டிருந்தனர். இதேபோல, கனடா அரசு சார்பில் இரண்டாவது விமானம் வூகானுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ங. ஹாங்காங்கைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஜோஷ_வா என்பவர், ஹாங்காங்கின் வசதி வாய்ப்பில் பின்தங்கிய ஒரு லட்சம் மக்களுக்கு மாஸ்க் வாங்கி விநியோகித்துள்ளார். ச. தாய்வான் அரசு சார்பில் ஹாங்காங், மேக்கோ, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து பகுதிகளுக்குப் பயணப்படுபவர்களுக்கு கொரோனா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞ. சிங்கப்பூரில், இரண்டு அகவையேயான பெண் குழந்தைக்கு கொரோனா பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், குழந்தை தற்போது தனி அறையில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறாள். ட. கொரோனா பாதிப்பு, ஒருவரிடமிருந்து ஒருவருக்குப் பரவும் தொற்று வகையைச் சேர்ந்தது என்பதால், கொரோனா உதிரும் தலைமுடி வழியாகக்கூடப் பரவுவதற்கான வாய்ப்புள்ளதெனக் கூறப்படுகிறது. இந்தக் கருத்தைத் தொடர்ந்து, சீனாவில் நோயாளிகளுக்காக இயங்கும் செவிலியர்களில் பெரும்பாலானோர் மொட்டை போட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றுப் பரவும் அபாயம் கட்டுப்படுத்தப்படும் என்பதால், மற்ற சீனர்களும்கூட இதை முயலலாம் எனக்கூறி, மொட்டைத் தலையுடன் சமூக வலைதளங்களில் காணொளிப் பதிவுகளை தொடர்ச்சியாகத் தந்து வருகிறார்கள் சீன செவிலியர்கள். தங்களின் பணிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் இந்தத் தியாகத்தைச் செய்துள்ள அவர்களுக்கு உலகம் முழுக்கவிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ண. சீனாவில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ள பகுதி, ஹ_பாய். இந்தப் பகுதியில், பாதிப்பு இவ்வளவு வேகமாகப் பரவியதற்கு அங்கு பணிபுரிந்த மருத்துவ அதிகாரிகளின் அலட்சியமே முதன்மைக் காரணமெனக் கூறி, அங்கு பணியிலிருந்த பல உயரதிகாரிகளை நேற்று பணி நீக்கம் செய்துள்ளது சீன அரசு. த. உலக நலங்குத்துறை நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ், நேற்று நடந்த இதழியலாளர் சந்திப்பில், இந்தப் புது வகை கோவிட் - 19 பாதிப்புக்கான தடுப்பு மருந்து, இன்னும் 18 மாதக் காலத்தில் கண்டறியப்படலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ந. கோவிட் - 19 வகை கொரோனா பாதிப்பு இரண்டு மாதத்திற்குள் கட்டுக்குள் வந்துவிடும் என, சீனாவின் மூத்த மருத்துவ அதிகாரிகள் கணித்துள்ளனர்.
ஒள. ஹாங்காங்கில் ஏழு பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஹாங்காங் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 49 ஆகியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



