Show all

எப்படி இப்படியான துணிச்சல்! தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதில் மகிழ்ச்சியாம்- இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு

அண்டை நாட்டு குடிமக்களான தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இராணுவ நடவடிக்கை எடுத்து வருவதே மாபெரும் குற்றம் என்கின்ற நிலையில், தங்கள் குற்றமான நடவடிக்கையில் மகிழ்வது கண்டிக்கத்தக்க திட்டமிட்ட குற்றவியல் நடவடிக்கையே ஆகும்.  

13,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: அண்டை நாட்டு குடிமக்களான தமிழக மீனவர்கள் மீது இலங்கையின் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள், தொடர்ந்து இராணுவ நடவடிக்கை எடுத்து வருவதே மாபெரும் குற்றம் என்கின்ற நிலையில், தங்கள் குற்றமான நடவடிக்கையில் மகிழ்வது கண்டிக்கத்தக்க திட்டமிட்ட குற்றவியல் நடவடிக்கையே ஆகும்.  

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல் படை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும், அத்துமீறுவதும் பல ஆண்டுகளாகத் தொடர் கதையாக நடந்து வரும் செயலாகும். ஒன்றிய, மாநில அரசுகள் தலையீட்டால் மட்டுமே அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். மற்றபடி இந்தச் சிக்கலுக்கு இதுவரை ஒரு தீர்வும் காணப்படவில்லை. 

நேற்று, இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 600க்கும் மேற்பட்ட படகுகளில்- காங்கிரசு அரசால் இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்ட தமிழர் தீவான கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது திடீரென அங்கு வந்த சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி எறிந்து, கண்ணாடி சீசாக்களையும் வீசி கண்மூடித்தனமாக மீனவர்களை தாக்கியுள்ளனர். பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் எல்லாம் சேதம் ஆகிவிட்டன. 

தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் தாக்கப்பட்டது குறித்து இலங்கை கடல்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய மீனவர்கள் மீது இலங்கை கப்பல் படைதாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்ற தெரிவித்துள்ளார்.

மேலும், நான் ஏற்கனவே இந்திய தரப்பு- குடிஅரசுத் தலைவருக்கு, தலைமைஅமைச்சருக்கு, கடற்படை தளபதிக்கு, எல்லாருக்கும் சொன்னேன் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் என்று. அப்படி கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், இந்திய-இலங்கை மீனவர்களிடையே மோதல் கண்டிப்பாக உருவாகும். கடல்ல சண்டை தொடங்கும்னு சொன்னேன், என்றும் தெரிவித்துள்ளார். 

இப்படி மிரட்டல் விடுக்கும் வகையிலும், பொறுப்பற்ற முறையிலும் பேசியுள்ள டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.