நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் 7.5விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கத் தாமதிக்கும் நிலையில், நலங்குத் துறை சார்பில் நலங்குத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த அசத்தல் முன்னெடுப்புக்கு நன்றி, பாராட்டு, மற்றும் வாழ்த்துக்களை வழங்கி மகிழ்கின்றோம். 13,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் 7.5விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கத் தாமதிக்கும் நிலையில், நலங்குத் துறை சார்பில் நலங்குத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார். தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களைப் பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டுத் தேர்வில் வகைப்படுத்துவது என்பது அறங்கூற்றுச் சமனிலைக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ஓய்வுபெற்ற உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் பி.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில திருத்தங்கள் கோரி ஆளுநர் திருப்பி அனுப்பினார். பின்னர் அந்தத் திருத்தங்களுடன் கடந்த 30,ஆவணி (செப்டம்பர்15) அன்று சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நடப்பாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் சுமார் 300 இடங்கள் கிடைக்கும். நீட் தேர்வு முடிவுகள் 30,புரட்டாசி (அக்டோபர்16) அன்று வெளியிடப்பட்டு, மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்குக் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு காத்திருக்கிறது. இந்நிலையில் அறங்கூற்றுமன்றத்தில் இவ்வழக்கு வந்தபோது ஆளுநரை நிர்பந்திக்க, உத்தரவிட அறங்கூற்றுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஆளுநர் அனுமதி குறித்து அரசுத் தரப்பு காத்திருந்தது. ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர். இந்நிலையில் கலந்தாய்வு தடைப்படுவதால் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தும் விதமாக, தமிழக அரசின் சார்பில் 5 அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித்து விரைவாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். உரிய முடிவெடுப்பதாக ஆளுநர் தெரிவித்ததாக அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். ஆளுநர் ஒப்புதல் வழங்க அறங்கூற்றுமன்றம் தலையிட முடியாது என சட்ட அடிப்படையாகச் சொல்லலாம். ஆனால் மனசாட்சிப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளை இன்று தெரிவித்தது. இந்நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தள்ளிப்போடுவதால் கலந்தாய்வும் தள்ளிப்போகிறது. இதனால் மாணவர், பெற்றோர் நடுவில் உருவாகும் நிம்மதியற்ற நிலையைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு 7.5விழுக்காடு உள் ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்திட இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. நலங்குத் துறை சார்பில் நலங்குத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார். அரசாணை மூலம் மாணவர்களுக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது. இதை எதிர்த்து யாராவது அறங்கூற்றுமன்றம் சென்றால் அரசு சந்திக்கத் தயாராக உள்ளதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். விரைவில் கலந்தாய்வுத் நாளை அரசு அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுக்கு நன்றி, பாராட்டு, மற்றும் வாழ்த்துக்களை வழங்கி மகிழ்கின்றோம்.
பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்குப் பதிலளித்திருந்த ஆளுநர், ஒப்புதல் அளிக்க 3 முதல் 4 கிழமைகள் காலக்கெடு தேவைப்படுவதாக கடந்த கிழமை தெரிவித்திருந்தார். இதனால் திமுக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடந்தது.
இட ஒதுக்கீடு பாட்டில் தமிழக அரசு சுயமாக முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என உச்ச அறங்கூற்றுமன்றம் முன்னரே தீர்ப்பளித்துள்ள நிலையில், இதுகுறித்து ஆளுநரின் ஒப்புதல் தேவை இல்லை. அரசாணையாக அரசு வெளியிட்டு, மாணவர்கள் கலந்தாய்வுக்குச் செல்லலாம் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் உள்ளிட்ட பலர் கருத்துத் தெரிவித்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



