அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறும் பத்தாவது உலகத் தமிழ் மாநாடு புதன் கிழமை அன்று தொடங்கி, சிறப்பாக முன்னெடுக்கப் பட்டு வரும் நிலையில், நாளை முடிவடைகிறது. 21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறும் பத்தாவது உலகத் தமிழ் மாநாடு புதன் கிழமை அன்று தொடங்கி, சிறப்பாக முன்னெடுக்கப் பட்டு வருகிறது. உலகத்தமிழ் மாநாடுகளுக்கு ஒவ்வொரு முறையும் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம். அந்த வகையில், தற்போது சிகாகோ நகரில் நடைபெறும், பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த நிதி உதவி கோரி, உலக தமிழ் ஆராய்ச்சி மன்றம், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது. இதன் அடிப்படையில், மாநாட்டிற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்கும் 20 பேர், சிகாகோ சென்று வர விமானக் கட்டணம் உள்ளிட்ட பிற செலவினங்களுக்கு 60 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா மற்றும் வடஅமெரிக்க பேரவையின் 32 ஆம் ஆண்டு விழா நிகழ்வுகள் கோலாகலமாக புதன் அன்று விழா தொடங்குவதற்கு சில மணிநேரங்கள் முன்பிலிருந்தே தமிழ் அறிஞர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் உலகத்தின் பல பகுதிகளில் வாழும் தமிழ் பெருமக்களும் உற்சாகத்துடன் வரத்தொடங்கினர். தமிழ் மரபையும் பண்பாட்டையும் உலக அரங்கில் எடுத்தியம்பும் விதமாக அடையாளச் சின்னங்களோடு விழா அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. சிறார்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. தொடர்ந்து திருக்குறள் மறை ஓதப்பட்டது. நிகழ்ச்சி நடக்கும் அமெரிக்கா நாட்டின் நாட்டுப்பண் இசைக்கப்பபட்டபிறகு குத்து விளக்கு ஏற்றப்பட்டது. தமிழை வாழ்த்தும் விதமாக ‘செந்தமிழே வணக்கம்’ என்ற பாடலுக்கு வரவேற்பு நடனம் அரங்கேறியது. மங்கள இசையுடன் விழா தொடர்ந்தது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், சிகாகோ தமிழ் சங்கத் தலைவர் மற்றும் வட அமெரிக்க பேரவையின் தலைவர் மூவரும் வரவேற்புரை நிகழ்த்தினர். ‘தமிழ் தமிழர்’ என்ற தலைப்பில் ஸ்டாலின் குணசேகரன், கீழடி ஆய்வு குறித்து இந்திய நாடாளுமன்றத்தின் மதுரை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். சிகாகோ, அயோவா, மத்திய இலினாய்சு, நியூயார்க், மினசோட்டா மற்றும் டொரோண்டோ தமிழ் சங்கத்தினர் மரபு கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். கலிபோர்னியாவில் செம்மையாக நடத்தப்படும் தமிழ் பள்ளிகள் பற்றிய காணொளி திரையிடப்பட்டது. சிகாகோ தமிழ் சங்கத்தினர் தமிழர் வாழ்வியல் பெருமைகளை உயர்த்திக்காட்டும் விதமாக நாடகம் நடத்தினர். சிலம்பம் அருணாச்சலம் மணி தலைமையில் மரபு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முப்பெரும் விழாவின் சிறப்பு விழா மலர் வெளியிடப்பட்டது. ‘கீழடி என் தாய்மடி’ என்ற தலைப்பில் கவிஞர் சல்மா தலைமையில் அமெரிக்க தமிழன்பர்கள் பங்குபெற்ற கவியரங்கம் சிறப்பாக அமைந்தது. இந்நிகழ்வில் ஜி.யு. போப் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அமெரிக்கா, கனடா, நார்வே, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நடன குழுவினர், ‘ஈழத்தின் நடனமும் பாரம்பரியமும்’ என்ற தலைப்பில் நடனமாடினார். நவி பிள்ளை (ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் உயர் ஆணையர்) உலகத் ‘தமிழர் விழிப்புணர்வு நேரம்’ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். சிகாகோ தமிழ்ச்சங்கம் பொன்விழா கொண்டத்தின் முத்தாய்ப்பாக சிறப்பு பொன்பறை சிகாகோ பறை கலைஞர்களால் அரங்கேற்றப்பட்டது. ஹ_ஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முன்னெடுப்பு பற்றி விவரிக்கப்பட்டது. இளம் சாதனையாளர் லிடியன் நாதஸ்வரத்திற்கு பாராட்டு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முரசு சேர்ந்திசை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக அமைந்தது. சாலமன் பாப்பையா தலைமையில் ‘தமிழர் பெருமையில் விஞ்சி நிற்பது அகமா? புறமா?’ என்று ராஜா, பாரதி பாஸ்கர் மற்றும் அமெரிக்க பேச்சாளர்கள் பங்குபெற்ற சிறப்பு பட்டிமன்றத்துடன் முதல் நாள் நிகழ்வுகள் சிறப்பாகச் சென்று கொண்டிருக்கின்றன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,205.
கவிஞர் சல்மா, அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் இணைஅமர்வில் பங்கேற்று அம்பேத்கர், பெரியார் சிலையை வெளியிட்டார். அமெரிக்காவில் பல மாநிலங்களில் இயங்கிவரும் தமிழ்ப் பள்ளிகள் பற்றிய கண்ணோட்டம் விவரிக்கப்பட்டது. தஞ்சை கழிமுகப் பகுதி வேளாண் மக்களின் உரிமைக்குரலை அடக்கும் விதமாக நடந்த கொடூரத்தையும் இன்று தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை சுரண்டும் அவலங்களையும் உணர்வுப்பூர்வமாக எடுத்து இயம்பும் ‘குரலற்றவர்களின் குரல்’ நாடகம் மின்சோட்டா தமிழ் சங்கத்தினரால் அரங்கேற்றப்பட்டது. தமிழறிஞர் ஜி.யு. போப்பை பாராட்டி பேராசிரியர் திருஞானசம்பந்தம் உரைநிகழ்த்தினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.