Show all

கோவிசீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் ஓர் அலசல்!

கோவிசீல்டு, கோவாக்சின் இரண்டில் எது சிறந்த தடுப்பூசி என்ற விவாதம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மருத்துவப் பணியாளர்களிடம் நடத்தப்பெற்றுள்ளது ஓர் ஆய்வு. அந்த ஆய்வு குறித்த கட்டுரை இது.

25,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கோவிசீல்டு, கோவாக்சின் இரண்டில் எது சிறந்த தடுப்பூசி என்ற விவாதம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மருத்துவப் பணியாளர்களிடம் ஓர் ஆய்வு நடைபெற்றுள்ளது. 

இந்தியாவில் 13 மாநிலங்களில் 22 நகரங்களில் பணியாற்றும் 515 பேர்களிம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் 325 பேர்கள் ஆண்கள், 227 பேர்கள் பெண்கள். ஆய்வு முடிவில் இரண்டு தடுப்பூசிகளுக்கும் இரண்டாவது தவணைக்குப் பிறகு நேர்மறையான விளைவுகள் தென்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனாலும், அவற்றில் குறிப்பாக, கோவிசீல்டு தடுப்பூசி இரண்டு பாடுகளில் கோவாக்சினைவிட சிறப்பாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தடவை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் நோய்க்கு எதிரான எதிர்மெய் கோவாக்சினைவிட கோவிசீல்டில் 10 மடங்கு அதிகமாக உருவாகியிருக்கிறது. இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கோவாக்சினைவிட கோவிசீல்டு போட்டுக்கொண்டவர்களுக்கு 6 மடங்கு எதிர்மெய் (ஆன்டிபாடி) உருவாகியிருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வானது முதல்நிலை ஆய்வு என்பதால் இதை அடிப்படையாக எடுத்துக்கொண்டு பொதுமக்களிடம் நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றைத் தடுப்பதற்காகச் செலுத்தப்பட்ட தடுப்பூசியை உடல்கள் ஏற்றுக்கொண்டு குறுவிகளுக்கு (வைரஸ்) எதிராக எதிர்மெய் (ஆன்டிபாடி) உருவாக்கியிருக்கிறதா என்பதற்காக இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் தடுப்பூசிக்குப் பிறகு, உடலில் உருவான எதிர்மெய்யின் அளவு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சினைவிட கோவிசீல்டில் அதிகம் இருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவரின் குறிப்பிட்ட மில்லி அளவு குருதியில் எதிர்மெய் (ஆன்டிபாடி) எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறியும் பரிசோதனை இருக்கிறது. எதிர்மெய்யின் அளவை தன்னிச்சை அலகு (ஆர்பிட்ரரி யூனிட்ஸ்) என்று கணக்கிடுவார்கள். அந்த வகையில் கோவிசீல்டு எடுத்துக்கொண்டவர்களுக்கு ஒரு மில்லி குருதியில் 115 - 127 தன்னிச்சை அலகுகள் இருந்திருக்கின்றன. கோவாக்சின் எடுத்துக்கொண்டவர்களுக்கு 51 தன்னிச்சை அலகுகள் தாம் இருந்திருக்கின்றன.

கோவிசீல்டு புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி. கொரோனா குறுவியில் காணப்படும் முள்போன்ற அமைப்பான புரதத்திற்கு எதிராகச் செயலாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி. குறுவியைச் செயலிழக்க வைத்து தயாரிக்கப்படும் தடுப்பூசி கோவாக்சின். 

ஏற்கெனவே நடைபெற்ற பல்வேறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் சுமார் 150 நாடுகளில் கோவிசீல்டு தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பலதரப்பட்ட நாடு, இன மக்களிடையே ஆய்வுகளையும் செய்துள்ளனர். கோவாக்சின் 9 நாடுகளில் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கோவிசீல்டு பற்றிய ஆய்வுகள் அதிகளவில் நடைபெற்றுள்ளன. கோவாக்சின் பற்றிய ஆய்வுகள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே நடைபெறுகின்றன. அதில் எந்தவித முன்னேற்றமும் தெரிவிக்கப்படவில்லை. கோவாக்சின் பற்றிய தரவுகளை முழுமையாக முன்வைத்திட வேண்டும் வேண்டும். அப்போதுதான் மக்கள் நடுவே அதுபற்றிய நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

இப்போது பரவி வரும் உருமாறிய குறுவிகள் அனைத்தும் முழுவதுமாக உருமாற்றம் அடையவில்லை. அதன் இனக்கீற்று அமிலம் (டி.என்.ஏ) வரிசையில் சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. எனவே, தற்போது உலகம் முழுவதும் புழக்கத்தில் இருக்கும் 9 வகையான தடுப்பூசிகளுமே உருமாறிய அனைத்து வகையான குறுவிகளுக்கும் எதிராகவும் செயலாற்றும்.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் கோவாக்சினை அங்கீகரிக்கவில்லை. இதனால் வெளிநாடுகளில் படிக்கும், படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள், தொழில்முனைவோர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் அவர்களால் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. 

உலகம் முழுவதுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் அவை அமைந்துள்ள நாடுகளில் புழக்கத்திலுள்ள கோவிட்-19 தடுப்பூசி அல்லது உலக நலங்கு நிறுவனத்தின் பட்டியலிலுள்ள தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்கும். அந்த வகையில் இந்தியாவில் கோவிசீல்டு போட்டுக்கொண்டவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்துக்கு தடையிருக்காது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள், மாநகராட்சி போன்றவை ஓர் அட்டையில் தடுப்பூசி செலுத்தியதாகப் பதிவுசெய்து கொடுக்கின்றனர். அதை ஆதாரமாக பன்னாட்டுப் பயணங்களுக்கோ, தடுப்பூசி சான்று கேட்கும் இடங்களிலோ முன்வைத்திட முடியாது. அரசின் கோவின் செயலியில் பதிவு செய்து அதில் வழங்கப்படும் சான்றிதழ் மட்டுமே உரிய சான்றாக அங்கீகரிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.