Show all

சீனாவிடம் கடன்வாங்கி சீனாவிற்கு கடன்பட்டுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட வளரும் நாடுகள்!

இந்தியா உலக வங்கியிடம் கடன்வாங்கி, அதன் நிபந்தனைகளுக்கு நாட்டின் நிருவாக அமைப்பை முன்னெடுப்பது போல- சீனாவிடம் ஐம்பதுக்கும் மேற்பட்ட வளரும் நாடுகள் கடன் வாங்கி கடன் பட்டுள்ளதாக தெரியவருகிறது. சீனாவின் கெத்துக்கு இதுதான் காரணமா என்று, இந்தச் செய்தி நமக்கு தெளிவு படுத்துவதாகிறது. 

08,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ட்ரெபேஷ், கார்மென் ரீன்ஹார்ட் மற்றும் செபாஸ்டியன் ஹார்ன் ஆகியோர் கொண்ட குழு 1949 முதல் 2017 வரை சீனா வழங்கிய 5,000 கடன்களை ஆய்வு செய்துள்ளது.

பல ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ததில், உலகின் நிதி அமைப்பில் சீனாவின் உண்மையான பங்களிப்பு குறித்துக் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வளரும் நாடுகளில், சீனா அதன் வேர்களை வலுப்படுத்தியுள்ளது. பொது மற்றும் தனியார் துறைகளுக்கு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் கடன் வழங்குவதன் மூலம் இதைச் சாதித்துள்ளது சீனா.

இந்தக் கடன்கள் மறைவான கடன்கள் என்று அழைக்கப் படுகின்றன. இது வெவ்வேறு சீன அமைப்புகளால் வழங்கப்பட்ட கடன்கள். இந்த அமைப்புகள் குறித்த தகவலைப் பெறுவது எளிதல்ல, காரணம், எந்தவொரு சர்வதேச அமைப்பிலும் பதிவு செய்யப்படாதவை இவை. அதனால் தான் இவை மறைவான கடன்கள் என்று தலைப்பிடப்பட்டுள்ளன.

இந்த ஒளிவு மறைவுக் கடன்களின் மொத்த அளவு கடந்த இருபதாண்டுகளில் அதிகரித்துள்ளது. இப்போது அது 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது என்று இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நிலுவையில் உள்ள கடனின் ஒருங்கிணைந்த மதிப்பையும் உள்ளடக்கியது.

சீனாவிடமிருந்து அதிக கடன் பெற்ற 50 நாடுகளைப் பற்றி ஆய்வு செய்தால், இந்த நாடுகளில் சராசரி கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 15 விழுக்காட்டிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது. இது குறித்து, 2016 வரையிலான புள்ளிவிவரங்கள் மட்டுமே கிடைக்கின்றன.

‘நேரடிக் கடன்களின்’ பெரும்பகுதி சீன அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் இரண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள், சீன வளர்ச்சி வங்கி மற்றும் சீன எக்சிம் வங்கி. அதாவது ஏற்றுமதி இறக்குமதி வங்கி. ஆனால், சீனா மற்ற நாடுகளுக்கு கடன் வழங்க, மறைமுக அமைப்புகளும் உள்ளன.

அத்தகைய கடன்களைக் கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலான பணியாகும், ஏனென்றால், அரசுகளுக்கிடையிலான கடன்களாக வெளிப்படையாக வழங்கப்படுவது அரிதாகவே உள்ளது.

கடன்களில் பெரும்பாலானவை அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக் கானவையாகவும் அவற்றைப் பெறும் நிறுவனங்களும் அரசுக்குச் சொந்தமானவையாகவுமே உள்ளன. அவற்றைப் பெறும் நிறுவனங்களும் பொதுவாக அரசுத் துறை சார்ந்தவையாகவே உள்ளன.
 “நாட்டின் கடன் நிலவரம் மற்றும் அது யாருக்குக் கடன்பட்டிருக்கிறது என்பதை அறிவது அரசாங்கத்திற்கும், வரி செலுத்துவோருக்கும் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையின் பகுப்பாய்வுக்கும் கட்டாயம்” என்று ட்ரெபேஷ் விளக்குகிறார்.

உலக நாடுகளுக்குக் கடன் வழங்கும் ஒரு சக்தியாக கடந்த 20 ஆண்டுகளில் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளது சீனா. உலக நாடுகளுடன் தடையற்ற வணிகம் என்ற தாராளமயமாக்கலை அப்போதே ஆதரிக்கத் தொடங்கியது.

அதனுடன், சீனாவின் பொருளாதாரமும் வேகமாக முன்னேறி வருகிறது, மேலும் சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் சீனாவின் முதன்மைத்துவமும் அதிகரித்து வருகிறது.

ட்ரெபேஷ் கூறுகிறார், “சீனா உலகின் மிகப்பெரிய அரசாங்கக் கடன் வழங்கும் நாடாக மாறியுள்ளது. சீனா அளவுக்கு உலகில் எந்த அரசாங்கமும் கடன் கொடுக்கவில்லை.”

2018 ஆம் ஆண்டின் தரவின் படி, சீனா உலகின் பிற நாடுகளுக்கு (வளர்ந்த நாடுகள் உட்பட) 5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகக் கடன் வழங்கியுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 விழுக்காடு மட்டுமே இருந்தது.

சீனா தனது வங்கிகளின் மூலமாக அரசின் கருவூலப் பத்திரங்களைக் கூட வாங்கும் பெரிய பொருளாதாரமான அமெரிக்க நிறுவனங்களுக்கும் கூட கடன் வழங்குகிறது. என்றாலும் குறைந்த வருமானம் ஈட்டும் சிறிய பொருளாதார நாடுகளில் அதன் ஆதிக்கம் அதிகம் உள்ளது.

இப்படியாக, ஏழை நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் சீனா வழங்கும் கடன் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) அல்லது வேறு எந்த அரசாங்கம் வழங்கும் கடனையும் விட அதிகம்.

சீனாவுக்கு அதிகம் கடன்பட்டுள்ள 50 நாடுகளில்:- ஜிபூட்டி, டோங்கா, மாலத்தீவு, காங்கோ ஜனநாயக குடியரசு, கிர்கிஸ்தான், கம்போடியா, நிஜேர், லாவோஸ், ஜாம்பியா மற்றும் சமோவா ஆகியவை சீனாவிடம் கடன் பெறும் முதல் 10 நாடுகள் ஆகும்.

சீனாவிடம் கடன் பெறும் 50 கடனாளி நாடுகளின் சராசரி கடன் 2005ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்து 2017 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 விழுக்காட்டிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

மற்றொரு கோணத்தில், இந்த நாடுகளின் வெளிநாட்டுக் கடன்களில் 40 விழுக்காடு சீனாவிலிருந்து வந்தவை. இவற்றில், சீனாவின் மிகப்பெரிய கடனாளிகள், வெனிசுவேலா, ஈக்வடார் மற்றும் பொலிவியா ஆகிய மூன்று லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆகும்.

“சர்வதேச நிதி அமைப்பின் மீது அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம் குறித்து உலகம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை”, என்று கூறும் ட்ரெபேஷ், “உலகின் பெரும்பகுதிக்கு சீனா ஒரு தலைமைத்துவ நாடாக மாறிவிட்டது என்பதை நாம் இப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார்.

“சீனா வழங்கும் கடன்கள் வளரும் நாடுகளில் மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும். அவற்றின் தாக்கம் காலப்போக்கில் அதிகரித்து வருகிறது, எனவே, இந்த திசையில் நாம் மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.” என்றும் அவர் கூறுகிறார்.

இந்தச் செய்தியை நாம் சீனாவின் மீது பொறாமைப்படுவதற்கானதாக எடுத்துக் கொண்டு, விட்டேனா பார் என்று, அசட்டு முயற்சிகளை முன்னெடுத்து, மேலும் நம்மை வீணடித்துக் கொள்ளக்கூடாது என்று அறிஞர் பெருமக்கள் தெரிவிக்கிறார்கள். 

இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து, இந்தியாவில் தொடர்ந்து வடஇந்தியக் கட்சிகளே நடுவண் அரசில் ஆளுமையில் இருந்து கொண்டு, அவர்கள் நமது மக்கள் மீது நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிற ஹிந்து மதம், நாடோடி காலத்தில் அருவருப்பாக முன்னெடுக்கப்பட்ட தொல்கதை கலாச்சாரம், ஹிந்தி மொழி, பார்ப்பனிய இன ஆதிக்கங்களை தூக்கி வீசிவிட்டு- 

மக்களின் நலன் பேணும் மனிதநேயத்தை மதமாகவும்;- 
பாலியல் ஒழுக்கமற்ற, அருவருப்பான தொல்கதைகளை அருங்காட்சியகங்களிலும், நூலங்களிலும் வரலாற்று ஆய்வுகானதாக மட்டுமாக முன்னெடுத்து, அனைத்து மக்களின் பல்வேறுபட்ட கலாச்சாரங்களை அங்கீகரிப்பதே இந்தியாவின் கலாச்சாரமாகவும்-
இந்தியாவின் அரசிலமைப்பு ஏற்றுக் கொண்ட அட்டவணை எட்டில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை இந்தியாவின் அதிகார மொழிகளாகவும்- 
அரியணையேற்றினால் சீனா என்ன, ஒட்டு மொத்த உலகத்தையே இந்தியா எதிர்கொள்ள முடியும். 

இந்தியக் குடிமகனின் மீது, இந்திய அரசுகள் தலைக்கு 60,034 வீதம் வாங்கியுள்ள கடன் தொகையை அடைத்து விட்டு இந்தியாவும் மற்ற நாடுகளுக்கு கடன் கொடுத்து சீனாவைப் போல் ஆதிக்கம்செலுத்த முயலாமல், அடுத்த நாடுகளையும் நமக்கு இணையாக முன்னேற்ற முயலலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.