இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த இரண்டு அகவை குழந்தையை இலாவகமாக தாங்கிப் பிடித்து காப்பாற்றிய இளைஞர்! இந்தக் காணொளி இணையத்தில் தீயாகி பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. 12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தோகாமுகமது என்ற 2 அகவை பெண் குழந்தை, இரண்டாவது மாடியில் உள்ள தன் வீட்டின் சன்னல் ஓரத்தில் நின்று விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அந்த வீட்டிற்கு நேரே உள்ள ஒரு பணிமனையில் வேலை செய்பவர்தான், பெயூசிசபாத் என்ற இளைஞர். கொஞ்ச நேரம் இளைப்பாற பணிமனையில் இருந்து வெளியே வந்த நபருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சபாத், எதிரே இரண்டாவது மாடியில் குழந்தையைப் பார்த்தபிறகு, அது பாதுகாப்பில்லாமல் விளையாடிக் கொண்டிருப்பதாக உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். அது கீழே விழப்போகிறது என்பதை புரிந்துகொண்டு, வீட்டிற்கு அருகே வந்து, அங்கேயே அசையாமல் நின்றுகொண்டு, தோகாவைக் காப்பாற்ற என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்து நின்றிருந்த வேளையில், எதிர்பார்த்ததைப் போலவே குழந்தை கீழே விழுந்துள்ளது. அந்தக் கண நேரத்தில் யோசித்து, தன் இரு கைகளாலும் குழந்தையைத் தாங்கிப்பிடித்துள்ளார். இதனால், குழந்தை அடிபடாமல் உயிர் தப்பியது. குழந்தையைக் காப்பாற்றிய காணொளி அங்குள்ள கண்காணிப்பு படக்கருவியில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வெளியானதன் மூலம் அப்பகுதியின் அதிசயமனிதர் ஆனார் சபாத். அல்ஜீரியாவைச் சேர்ந்த ஸபாத், துருக்கியில் குடியேறி வாழ்ந்துவருகிறார். தங்கள் குழந்தையைக் காப்பாற்றியதற்காக, குழந்தையின் குடும்பத்தார் சபாத்துக்கு பரிசுத் தொகை வழங்கி, பாராட்டி நெகிழ்ந்திருக்கிறார்கள். துருக்கி, இஸ்தான்புல் மாகாணத்தில் உள்ள பெயித் மாவட்டத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,196.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.