'இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்' என்று தலைப்பிட்டு, 28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகப்புகழ் பெற்ற டைம் இதழ் அட்டைப் படத்தில், இந்தியத் தலைமை அமைச்சர் மோடி காவித் துண்டுடன் இருக்கும் ஓவியத்தை இடம் பெறச்செய்து, 'இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்' என தலைப்பு வைத்து, 'மீண்டும் ஐந்து ஆண்டுகள் மோடியின் ஆட்சியை சகித்துக் கொள்ள முடியுமா?' என்று துணை தலைப்பையும் வைத்து கட்டுரை வெளியிட்டுள்ளது. இந்தியாவின், 'மதச்சார்பற்ற கொள்கை' இந்திய சமூகத்தில் இணக்கத்தை உருவாக்கி இருந்ததையும், ஹிந்து - இஸ்லாமிய மதத்தினருக்கு இடையே இருந்த சகோதரத்துவத்தை மோடியின் கொள்கைகள் தரைமட்டமாக்கியதையும் ஒப்பிட்டுள்ளது இந்தக் கட்டுரை. 'இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்' என்ற கட்டுரையை இந்திய இதழியலாளர் தவ்லீன் சிங்கின் மகன் ஆதிஷ் தசீர் எழுதி உள்ளார். மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், பெண்களுக்கான பிரச்சினைகள் மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் நிகழ்ந்த இறப்புகள், அவலங்கள், சிறுதொழில்கள் நசிவு, பொருளாதார வீழ்ச்சிகள் மற்றும், குண்டுவெடிப்பில் கைதான சாத்வி பிரக்யாவை வேட்பாளராக நிறுத்தியது என பல்வேறு காரணிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் மோடியின் புகைப்படத்துடன் டைம் இதழில் மோடியின் சிறப்புப் பேட்டி இடம்பெற்று இருந்தது. மோடியின் புகைப்படம் டைம் இதழின் சர்வதேச பதிப்பில் வெளியானது அதுவே முதல்முறையாகும். 'மோடி ஏன் முக்கியமானவர்?' என்ற தலைப்புடன், இந்தியா உலகின் சக்தியாக உயரவேண்டியது உள்ளது. ஓராண்டு ஆட்சி செய்துள்ள மோடியால் அதனை வழங்கமுடியுமா? என்ற கேள்வியுடன் மோடியின் பேட்டி வெளியாகியது. இப்போது ஐந்து ஆண்டு நிறைவடையும் நிலையில், இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் வேளையில்- நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் முற்போக்குவாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளாக, பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகளை மோடி முன்வைத்தார். ஆனால் அவரது மாயாஜாலம் பலிக்கவில்லை. மதம் சார்ந்த தேசியவாதத்தை இந்தியாவில் மோடி அரசு உருவாக்கி விட்டது. கடந்த தேர்தலின் போது நரேந்திர மோடி இந்தியாவுக்கான ஒரு மீட்பர் போல பார்க்கப்பட்டார். ஆனால், இப்போது தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதால், மறுபடியும் தேர்தலை சந்திக்க கூடிய, மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கெஞ்சுகிற ஒரு சாதாரண அரசியல்வாதி போலத்தான், மோடியும், மக்களால் பார்க்கப்படுகிறார். இவ்வாறு டைம் இதழ் தனது கட்டுரையில் தெரிவித்து உள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,149.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் உலகப்புகழ் பெற்ற டைம் இதழ் மோடியைக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கும் செய்தி உலகை பரபரப்பாக்கியுள்ளது.
இந்தியாவின் மிக முதன்மை அடிப்படை கட்டமைப்புகளான, மாநில சுயாட்சி, அதன் நிறுவன தலைவர்கள், சிறுபான்மையினரின் நிறுவனங்கள் மற்றும் இடங்கள், பல்கலைக்கழகங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை, ஊடகம் போன்றவை நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.