Show all

ஹிந்திமொழிக் கட்டளை புரியாமல், நிகழ்ந்திருக்க வேண்டியது பெரும் விபத்து! தமிழே தெரியாமல் தமிழக நடுவண் அரசுப் பணிகளில் அதிகாரிகள்

ஹிந்திமொழிக் கட்டளை புரியாமல், நிகழ்ந்திருக்க வேண்டியது பெரும் விபத்து! நல்ல வேளையாக தொடர் வண்டி ஓட்டுநர்களால் தவிர்க்கப் பட்டது அந்த விபத்து. மதுரையில் எதிரெதிரே வந்து விட்ட தொடர் வண்டிகள் மோதி இந்திய வரலாறு காணாத விபத்து நிகழ்ந்திருக்கும். காரணம்: தமிழே தெரியாமல் தமிழக நடுவண் அரசுப் பணிகளில் அதிகாரிகள்.

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: முச்சங்கம் கண்டு தமிழ் வளர்த்த மதுரையில், ஹிந்திமயமாக்கப்பட்ட தென்னக தொடர் வண்டித் துறையில், தமிழே தெரியாமல் அதிகாரியாக பணியில் நுழைக்கப் பட்டிருக்கும் ஹிந்தி அதிகாரி தீப்சிங் மீனா, எடுபிடி வேலையில் இருக்கும் தமிழகத்து ஜெயக்குமார் ஆகிய இருவரையும் தற்போது தென்னகத் தொடர் வண்டித்துறை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது. இரண்டு தொடர் வண்டிகளை, ஒரே இருப்புப் பாதையில், எதிரெதிரே இயங்கவிட்டு, தொடர்வண்டித்துறை வரலாறு காணாத தவற்றை செய்திருக்கின்றனர்.  

அண்மைக் காலமாக மோடியின் ஆட்சியில் தென்னகத் தொடர்வண்டித் துறை ஹந்தி அதிகாரிகள் மயமாக்கப் பட்டு வருகிறது. அதுவும் தமிழகத்தில் பணியாற்ற தமிழே தெரியாமல். 

விளைவு: ஹிந்தி மொழியில் வந்த தகவல் புரியாததால், ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே இரண்டு தொடர்வண்டிகள் வந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

மதுரை-செங்கோட்டை பயணிகள் தொடர்வண்டி நேற்று மாலை அரை மணி நேரம் தாமதமாக திருமங்கலம் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்தடைந்தது. அங்கிருந்து தொடர்வண்டி புறப்பட்டதும் சைகை கதவுப் பொறுப்பாளர் அடுத்துள்ள கள்ளிக்குடி தொடர்வண்டி நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் எதிர் வழியாக இயக்கப்படும் செங்கோட்டை-மதுரை தொடர்வண்டி கள்ளிக்குடி தொடர்வண்டி நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.

இதையடுத்து, இரண்டு தொடர்வண்டிகளும், ஓட்டுநர்களின் முன்னெச்சரிக்கையால் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதற்கு பின்னர் இரு தொடர்வண்டிகளும் வழிமாற்றி புறப்பட்டன.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மொழிப்பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கள்ளிக்குடியில் இருந்த நிலைய அதிகாரி தீப்சிங் மீனா ஹிந்தியில் தகவலை கூறியதை, தண்டவாளத்தில் இருந்த ஜெயக்குமார் தவறாக புரிந்து கொண்டதால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தீப்சிங் மீனா, ஜெயக்குமார் ஆகிய இருவரையும் தற்போது தென்னகத் தொடர்வண்டித்துறை தற்காலிக நீக்கம்  செய்துள்ளது.

இன்னும் நீட் தேர்வு மூலம் தமிழகத்து மருத்துவத் துறையையும் ஹிந்தி மயமாக்க திட்டமிட்டிருக்கிறது பாஜக அரசு. இன்னும் என்னென்ன வெல்லாம் விபத்துக்களை சந்திக்க விருக்கிறதோ தமிழகம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,149.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.